2 நாளாகமம் அல்லது* *குறிப்பேடுகள் புத்தகம் வேத பாடம் ஒன்பது
*உங்கள் சிந்தனைக்கு *
*2 நாளாகமம் அல்லது* *குறிப்பேடுகள்*
*புத்தகம்* .
வேத பாடம் ஒன்பது.
கர்த்தருக்கு பிரியம் இல்லாத திருமண உறவு மற்றும் புறயின மக்களோடு ஏற்படுத்தும் திருமண உறவு எவ்வளவு பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதற்கு பழைய ஏற்பாட்டிலும் பல உதாரணங்கள் உண்டு. அதில் ஒன்றைப் பற்றி இப்பொழுது தியானிக்கலாம்.
யோசபாத் யூத தேசத்தை ஆண்ட மிக சிறந்த மன்னர்களுள் அவனும் ஒருவன்.
பல விதமான ஆன்மீக சீர்திருத்தங்களை ஏற்படுத்தியவன். தன் ஜனங்கள் மத்தியில் வேதத்தை போதிப்பதற்காக லேவியர்களை நியமித்தவன்.
அப்படிப்பட்ட அரசன் தன் குடும்பத்தில் செய்த ஒரு தவறு, தலைமுறைகளை பாதித்தது. அவன் ஆண்ட நேரத்தில் இஸ்ரவேல் தேசத்தை ஆட்சி செய்தவன் ஆகாப். இவனுடைய மனைவிதான் யேசபேல். இவள் யார் என்றால் பாகாலை வழிபடும் சீதோனியரின் அரசனாகிய ஏத்பாகாலின் மகள். *2:இராஜா 16:31*
ஆகாபும் யேசபேலும் இணைந்து இஸ்ரவேல் தேசம் முழுவதும் பாகால்களைப் பின்பற்றும் ராஜ்ஜியமாக மாற்றி விட்டார்கள். இதை யெல்லாம் அறிந்த பிறகும் யூத தேசத்தை ஆண்ட யோசபாத்
யோராமுக்கு ஆகாபின் வீட்டில் பெண் எடுத்தான். அந்தப் பெண் தான் அத்தாலியா.
இந்த அத்தாலியா தன்னுடைய கணவனான யோராமை கடவுளுக்கு நேராக வழி நடத்தாமல் கடவுளுடைய பார்வைக்கு விரோதமான காரியங்களை நடப்பிக்க வைத்தாள். *2 நாளாக 21:6.*
தன்னுடைய கணவன் 38 வயதிலே மரித்த பிறகு அவனுடைய மகனான அகசியா ஆட்சிக்கு வந்தான்.
இவன் முழுக்க முழுக்க தன் தாய் அத்தாலியாளின் ஆலோசனைப்படி நடந்தான்.
அவன் தீய வழியில் நடக்க அவனுடைய தாய் அவனுக்கு ஆலோசனை கூறினாள். அவன் ஆகாபின் வீட்டார் செய்ததுபோல் யேகோவாவின் பார்வையில் தீமையானதைச் செய்தான்.
ஏனெனில் அவனுடைய தகப்பன் இறந்துபோன பின்பு ஆகாபின் வீட்டாரே அவனுடைய ஆலோசகர்களாய் இருந்தனர்;
அகசியாவின் அழிவுக்கு இவர்களே காரணமாயிருந்தார்கள்.
*2 நாளாகமம் 22:3-4*
அகசியாவும் ஒரு வருடத்தில் மரணம் அடைந்தான்.
பின்பு இந்த அத்தாலியாள் அரியணை ஏறினாள்.
இப்படியாக அத்தாலியாள் தன் கணவனையும் மகனையும் விக்கிரங்களுக்கு நேராக வழி நடத்தினாள்.
தான் அரசாட்சியில் நிலைத்திருக்க தன்னுடைய
பேரக் குழந்தைகளையே, அதாவது தன் மகன் அகசியாவின் வாரிசுகள் அனைவரையும் குறிப்பாக ஆண் குழந்தைகள் அனைவரையும் கொலை செய்து தானே ஆட்சி பீடத்தில் இருக்க முடிவு செய்தாள்.
இவள் தன் தாய் யேசபேலைவிடக் கொடூரமானவள்.
பதவி மோகம் எவ்வளவு கொடுமையானது என்பதை 2000 ஆண்டுகளுக்கு முன்பதாகவே வேதம் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.
இதில் இன்னொரு சாத்தானுடைய சதித் திட்டமும் இருந்தது.
அது என்னவென்றால் தாவீதின் வம்சத்தில் உலகத்தின் மீட்பர் இயேசு கிறிஸ்து தோன்றுவார் என்பது பிசாசுக்கு நன்றாகத் தெரியும்.
எனவே அந்த வம்சத்தின் இணைப்பைத் துண்டித்து விடுவதற்காக அத்தாலியாளை சாத்தான் பயன்படுத்தினான்.
ஆனால் அரசனான யோராமின் மகளும், அகசியாவின் சகோதரியுமான யேசபேல் கொலை செய்யப்படப்போகிற இளவரசனை,
அதாவது அகசியாவின் மகன் யோவாசை அத்தாலியாளிடமிருந்து கைப்பற்றி உலக இரட்சகர் பிறக்கக் கூடிய அந்த இணைப்பைக் காப்பாற்றினாள்.
இதன் மூலம் யோசபாத் தன் மகனை தவறான குடும்பத்தில் திருமணம் செய்து வைத்த காரியம் எவ்வளவு ஆபத்தானது என்பதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது.
புதிய ஏற்பாட்டிலும் புற இன மக்களோடு திருமண உறவு கொள்வதை தேவன் அனுமதிப்பதில்லை.
இதைப் பற்றி பவுல் தெளிவாக தன்னுடைய நிருபத்தில் எழுதியி ருக்கிறார்.
"அவிசுவாசிகளுடன் ஒன்றாக பிணைக்கப்படாதிருங்கள். நீதிக்கும் கொடுமைக்கும் இடையில், பொதுவானது என்ன? கிறிஸ்துவுக்கும், சாத்தானுக்கும் இடையே என்ன இணக்கம் இருக்கிறது?
விசுவாசிக்கும், அவிசுவாசிக்கும் இடையில் பொதுவானது என்ன இருக்கிறது?'
*2 கொரிந்தியர் 6:14-15.*
எனவே நமது குடும்பங்களில் இந்த காரியங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
திருமண காரியங்களில் நாம் எடுக்கிற தவறான முடிவுகள் நம்முடைய சந்ததியையும் வருங்கால சந்ததியையும் பாதிக்கும் என்பதற்கு
யோராம், அத்தாலியாள் திருமணம் ஒரு மிகப்பெரிய எச்சரிப்பு.