*நெகேமியா புத்தகம் – வேதபாடம் 20* *Expository Commentary on the Book of Nehemiah*
*நெகேமியா புத்தகம் – வேதபாடம் 20*
*Expository Commentary on the Book of Nehemiah*
*சிதறிய முத்துக்கள் 3.*
நேற்றைய பதிவில், இந்தப் புத்தகத்தில் சிதறிக் கிடக்கும் சில சத்தியங்களைப் பற்றி பார்த்தோம்.
இன்று, அதேபோல பரவலாகக் காணப்படும் இன்னும் சில சத்தியங்களைத் தியானிக்கலாம்.
தியானிக்க வேண்டிய பகுதி: நெகேமியா 8:8
“அவர்கள் இறைவனுடைய சட்டப் புத்தகத்தை வாசித்து, அதிலுள்ளவற்றை மக்களுக்கு விளங்கிக்கொள்ளத்தக்கதாகத் தெளிவுபடுத்தினார்கள். அதனால் எல்லா மக்களும் அதை விளங்கிக்கொண்டனர்.”
— நெகேமியா 8:8
இந்த வசனத்தில் “அவர்கள்” என்பது லேவியர்களைக் குறிக்கிறது. மோசேயின் பிரமாணங்களை யூதர்களுக்கு விளக்குவது லேவியர்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியப் பொறுப்பாக இருந்தது
கிறிஸ்தவர்களாகிய நாம் வேதத்தை தினமும் படித்தாலும், தியானித்தாலும், அதில் உள்ள முக்கியமான கருத்துகளையும் ஆழங்களையும் சரியாகப் புரிந்துகொள்ள, வேதத்தை நன்கு அறிந்த ஒரு போதகரின் அல்லது வேத ஆசிரியரின் விளக்கம் தேவையாக இருக்கிறது. அதனால், வேதத்தைப் பற்றிய சரியான புரிதல் இல்லாததற்குக் காரணமாக, பல நேரங்களில் சபைகளில் வேதம் முறையாக விளக்கப்படாமல் இருப்பது அமைந்துவிடுகிறது.
ஒரு ஊழியனின் முக்கியப் பொறுப்பு வேதவசனங்களை விளக்கி, சத்தியங்களைத் தெளிவுபடுத்தி, கர்த்தருடைய வசனத்தின் வெளிச்சத்தில் விசுவாசிகளை நடத்துவதாகும். அப்படி சபையை நடத்துகிறவனும் போதிக்கிறவனும் இந்தப் பணியைச் செய்யும்போதுதான், அவன் தேவனுடைய சன்னிதியில் வெட்கப்படாத ஊழியக்காரனாக நிற்க முடியும்.
அப்போஸ்தலர் 8:31-லும், “ஒருவர் விளக்காவிட்டால் எப்படி விளங்கும்?” என்ற உண்மையை நாம் காண்கிறோம் .
ஆகவே, வேதத்தைப் புரியவைக்கும் திறமை கொண்ட போதகர்களை எழுப்புவது சபைத் தலைவர்களின் முக்கியக் கடமையாகும்.
*சிதறிய முத்துக்கள் நான்கு.*
*தியானிக்க வேண்டிய பகுதி: நெகேமியா 13:6-9*
இந்த வசனங்கள் சொல்லும் ஆவிக்குரிய சத்தியம் என்ன?
நெகேமியா 12 ஆண்டுகள் எருசலேமின் ஆளுநராக இருந்த பிறகு, அரசனைச் சந்திக்க பாபிலோனுக்குச் சென்றான். பின்னர் மீண்டும் எருசலேமுக்குத் திரும்பினான். அப்போது, தேவனுடைய ஆலயத்தில் நடந்த ஒரு தவறைக் கண்டு அவன் மிகுந்த அதிர்ச்சி அடைந்தான். அது என்னவென்றால், ஆலயத்தின் முற்றத்திலிருந்த ஒரு அறையை எலியாசீப், தொபியாவுக்காக ஒதுக்கிக் கொடுத்திருந்தான் .
இதைக் கண்ட நெகேமியா மிகுந்த கோபமடைந்து, தொபியாவின் வீட்டுப்பொருட்களையெல்லாம் வெளியே எறிந்தான். பின்னர் அந்த அறைகளைத் தூய்மைப்படுத்தும்படி உத்தரவிட்டான். தேவனுடைய ஆலயப் பாத்திரங்களையும், தானியக் காணிக்கைகளையும், நறுமணத் தூபங்களையும் திரும்பவும் உள்ளே கொண்டுவந்தான்.
.
எலியாசிப் யார் என்றால், அவன் பிரதான ஆசாரியன். அவன் அமோனியனான தொபியாவுடன் திருமண உறவின் மூலமாக தொடர்பு வைத்திருந்தான். ஒரு ஆசாரியன் கர்த்தருடைய பிரமாணங்களை மீறி, புறஜாதியாருடன் ஏற்பட்ட உறவின் அடிப்படையில், தேவனுடைய ஆலயத்திலேயே அவருக்காக ஒரு இடத்தை ஒதுக்கிக் கொடுத்தது மிகப் பெரிய ஆவிக்குரிய வீழ்ச்சியாகும் .
இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்
1.தலைவர்கள் இல்லாத நேரங்களில், ஆவிக்குரிய வேடத்தில் தோன்றும் சிலர் தேவனுக்கு விரோதமான காரியங்களில் ஈடுபடக்கூடும். இப்படிப்பட்ட போலிகளைக் குறித்து சபைத் தலைவர்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.
2.தொபியா தேவனுடைய ஆலயத்தின் மறுகட்டுமானத்திற்கு தொடர்ந்து எதிராக இருந்தவன். அப்படிப்பட்ட எதிரியுடன் ஒரு ஆசாரியன் இணைந்து செயல்பட்டது அவனுடைய ஆவிக்குரிய வீழ்ச்சியை வெளிப்படுத்துகிறது. நம் எதிரிகள் சில நேரங்களில் நேரடியாகவும், சில நேரங்களில் மறைமுகமாகவும் வருவார்கள். ஆகையால், தொபியா போன்ற ஆவிக்குரிய எதிரிகளைக் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
3.புறஜாதியாருடன் ஏற்படுத்தும் தவறான திருமண உறவுகள், வெறும் சமூகத் தொடர்பாக மட்டுமல்ல; அது தேவனுடைய கட்டளைகளுக்கு எதிரான ஒப்பந்தமாகவும் மாறிவிடும். விசுவாசிகளின் பலம் என்பது, உலகத்தோடு கலக்காமல், பரிசுத்தமாகவும் தனித்தும் நின்று தேவனுடைய வல்லமையை வெளிப்படுத்துவதே.
அடுத்த பதிவில், மீதமுள்ள சிதறிய முத்துக்களைப் பற்றி பார்க்கலாம்.