கானான் தேசத்தில் லேவி கோத்திரத்திற்கு ஏன் நிலம் பங்கிட்டு தரப்படவில்லை?
உங்கள் சிந்தனைக்கு:
கானான் தேசத்தில் லேவி கோத்திரத்திற்கு ஏன் நிலம் பங்கிட்டு தரப்படவில்லை?
யோசுவா கானான் தேசத்தை யாக்கோபின் பிள்ளைகளுக்கு பகிர்ந்து கொடுக்கும் பொழுது லேவி கோத்திரத்திற்கென்று தனியாக எந்த ஒரு நிலப்பரப்பையும் பிரித்து கொடுக்கவில்லை .இதற்கு இரண்டு காரணங்களை வேத அறிஞர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
1.ஆதியாகம புத்தகம் 34 ஆவது அதிகாரத்தில் சொல்லப்பட்ட நிகழ்வில் லேவி, சிமியோன் செய்த காரியங்களை நியாயமானதாக யாக்கோபு கருதவில்லை.
சிகேம் ,தீனாள் விவகாரத்தில் சிமியோனும் ,லேவியும் கானான் தேசத்திலே கானானியரிடத்திலும் பெரிசியரிடத்திலும் தன்னுடைய வாசனையை கெடுத்ததாக யாக்கோபு குற்றம் சுமத்தினான்
ஆதியாகமம் 34:30.
அதன் விளைவாக தன்னுடைய இறுதி நாளில் இவர்களைக் குறித்து யாக்கோபு சொன்ன வார்த்தைகளை நாம் கவனிக்க வேண்டும்.
"சிமியோனும், லேவியும் ஏக சகோதரர்கள். அவர்களுடைய பட்டயங்கள் கொடுமையின் கருவிகள்.
உக்கிரமான அவர்கள் கோபமும் கொடுமையான அவர்கள் மூர்க்கமும் சபிக்கப்படக்கடவது: யாக்கோபிலே அவர்கள் பிரியவும், இஸ்ரவேலிலே அவர்களைச் சிதறவும் பண்ணுவேன்.
ஆதியாகமம் 49:7.
அதன்படி லேவி கோத்திரத்திற்கு தனியாக எந்த நிலப்பரப்பும் அளிக்கப்படவில்லை .
ஆனால் அவர்கள் 48 பட்டணங்களில் முழு கானன் தேசத்திலும் சிதறி வாழ்ந்தார்கள்.
அதுபோல சிமியோன் கோத்திரத்திற்கு அளிக்கப்பட்ட சுதந்தரம் யூதா சுதந்தரத்தின் நடுவிலே காணப்பட்டது. அவர்கள் தனித்து வாழாமல் யூதர்களுக்கு இணைந்து காணப்பட்டார்கள்
யோசுவா 19:
ஆக லேவி கோத்திரமும் சிமியோன் கோத்திரமும் இணைந்து வாழ முடியாமல் யாக்கோபு சொன்ன தீர்க்கதரிசனம் நிறைவேறியது.
2.லேவி கோத்திரம் கானான் தேசம் முழுவதுமாக பரந்து காணப்பட்டதால் அதுஅவர்கள் வேதத்தை எல்லா மக்களுக்கும் போதிக்க வசதியாக காணப்பட்டது.லேவி10:11
3. லேவியருக்கு கர்த்தரே சுதந்திரமாக இருக்கிறார்.
எண்26:62..
லேவி கோத்திரத்தை நம்முடைய பணிக்கென்று அவர்களைத் தேர்ந்தெடுத்தார். ஆசாரியர்களுக்கு உதவி செய்யும்படியாக நியமிக்கப்பட்டார்கள். இஸ்ரவேல் ஜனங்கள் தேவனுக்கு கொடுக்கின்ற தசமபாகம் காணிக்கைகளில் அவர்களுக்கு பங்கும் கிடைத்தது.
கர்த்தர் உணர்த்தும் பாடம் என்னவென்றால் லேவியருக்கு தண்டனையாக காணப்பட்ட காரியம் இறுதியில் அதை இறைவன் அவர்களுக்கு ஆசீர்வாதமாக மாற்றினார் .தேவனே அவர்களுக்கு சுதந்திரமாக இருப்பது எவ்வளவு மகிமையான காரியம்.
நம்முடைய வாழ்க்கையில் கூட தேவன் நம்முடைய தவறுகளுக்காக தண்டிக்கின்ற அதே வேளையில் அந்த தண்டனைகள் மூலமாக பின்னாட்களில் ஒரு மிகப்பெரிய ஆசீர்வாதத்தை நமக்கு வைத்திருப்பார். இதை நீங்கள் வாழ்க்கையில் அனுபவபூர்வமாக உணர்ந்து கொள்ளலாம்.
தேவன் மகிமைப்படுவாராக.