Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

1 சாமுவேல் புத்தகம் வேத பாடம் 3
1 சாமுவேல் புத்தகம்
வேத பாடம் 3
பற்பல சிறப்புகளைக் கொண்ட அன்னாளின் ஜெபம்.

வேதத்தில் எத்தனையோ ஜெபங்கள் காணப்பட்டாலும் இந்த ஜெபம் விசுவாசிகள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று சொன்னால் அதை மறுப்பதற்கு இல்லை.

இந்த ஜெபத்தை அடிப்படையாகக் கொண்டு எண்ணிலடங்காத பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ஆண்டவருக்கு ஒப்புக் கொடுத்து அந்தப் பிள்ளைகள் தேவனுடைய இராஜ்ஜியத்தில் அசாதாரணமான காரியங்கள் செய்ததை கிறிஸ்தவ உலகத்தில் நாம் பார்க்கலாம்.

அர்ப்பணிப்புள்ள பெற்றோர்களின் ஜெபத்தை தேவன் கேட்டு அவர்களின் பிள்ளைகளை ஏற்ற நேரத்தில் ஊழியத்திற்கு அழைத்து அவர்களை மகிமைப்படுத்தி இருக்கிறார்.

இத்தகைய சிறப்பு வேதத்தில் வேறு எந்த ஜெபத்திற்கும் கிடையாது.

மரியாளின் ஜெபத்திற்கும் இந்த விண்ணப்பம் ஒரு அடிப்படையாக இருந்தது என்று சொன்னாலும் தவறில்லை.
லூக்கா 1:46-55.

வியர்ஸ்பி‌ என்கிற வேதப் பண்டிதர் இந்த ஜெபத்தை யேகோவா, தாவீதை எல்லாப் பகைவரின் கைகளிலிருந்தும்,சவுலின் கையிலிருந்தும் விடுவித்தபோது பாடிய பாடலோடு ஒப்பிடுகிறார்.
2 சாமு.22

இந்தப் பாடலின் பெரும் பகுதிகள் தன் கணவனின்
இரண்டாவது மனைவியை குறித்து சொல்லிய காரியங்களாக இருப்பதை பார்க்கலாம்.
தகுதி இல்லாத தனக்கு தேவன் அளித்த கிருபையை போற்றி‌ப் பாடியதாக இருந்தாலும் அவள் எந்த நேரத்தில் இந்தப் பாடலை  பாடினாள் என்பதில்தான் இந்தப் பாடலின் சிறப்பு அடங்கியுள்ளது.

அவன்(குழந்தை  சாமுவேல்)பால்குடிப்பதை மறந்தபின் அவன், குழந்தையாய் இருந்தும் அவனைத் தன்னுடன் கூட்டிக்கொண்டு, சீலோவிலுள்ள யேகோவாவின் ஆலயத்துக்கு சென்று யேகோவா கடவுளிடம் ஒப்புக்கொடுத்த அந்த நேரத்தில்தான் இந்தப் பாடலை பாடினாள்.
1 சாமுவேல் 1:24.
ஒரு தாயின் மனநிலையில் இருந்து இந்தப் பாடலை நாம் அணுக வேண்டும்.

ஒரு பக்கம், மூன்று வருடம் வளர்த்த குழந்தையை இறைவனிடத்தில் அர்ப்பணிக்கப் போகிறோம் என்கிற ஒரு மிகப்பெரிய அழுத்தம் இருந்தாலும் அது தேவனுக்காக அர்ப்பணிக்கப்படுகிறது என்கிற சந்தோஷம் அந்தத் துக்கத்தை மறைத்தது. அந்த நேரத்தில் தான் இந்த பாடலை பாடினாள்.
அந்த நேரத்தில் தன்னுடைய நிந்தையை அகற்றிய தேவனை உணர்வுப் பூர்வமாக போற்றிப் பாடினாள். இதுதான் இந்தப் பாடலின் உச்சகட்ட சிறப்பு. ‌
இப்படிப்பட்ட சிறப்பான பாடலை இப்படிப்பட்ட சூழ்நிலையில் வேதத்தில் எந்த ஒரு நபரோ பெண்மணியோ தேவனை துதித்து பாடியதாக சொல்லப்படவில்லை.

அதனால்தான் அந்தப் பாடலை அடிப்படையாகக் கொண்டு இன்றைக்கு பெற்றோர்கள் ஏறெடுக்கும் ஜெபங்கள் அவ்வளவு வல்லமை உள்ளதாக காணப்படுகிறது.

இந்த ஜெபத்தில் அவளது கணவன் எல்க்கானாவின் பங்கும் முக்கியமானது.
அன்னாளின் நேர்த்திக் கடனை அறிந்து அவன் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. எதிர்ப்பு தெரிவிக்க வேதத்தில் அவனுக்கு அனுமதி இருந்தும் மனைவியினுடைய அர்ப்பணிப்பை அவன் மதித்தான்‌.(எண்ணா 30 வது அதிகாரம்).
எனவே அன் னாளின் அர்ப்பணிப்பில் அவளுடைய கணவனின் பங்கும் இணைந்து இருக்கிறது.
கர்த்தரைப் போலப் பரிசுத்தமுள்ளவர் இல்லை. உம்மையல்லாமல் வேறொருவரும் இல்லை. எங்கள் தேவனைப்போல ஒரு கன்மலையும் இல்லை.
இந்தப் பாடலின் வரிகள் தேவனின் பரிசுத்தத்தையும் அவரது ஒப்பில்லாத தன்மையையும் விளக்குகிறது.(His Holiness and uniqueness).
இது ஒரு தீர்க்கதரிசன பாடலாகவும் மாறியது.
பசியாயிருந்தவர்களோ இனிப் பசியாயிரார்கள். மலடியாயிருந்தவள் ஏழு பெற்றாள்.
1 சாமுவேல் 2:5

இந்த வரிகள் தனக்கு தேவன் பின்னால் அளிக்கப் போகிற குழந்தைகளை பற்றிய தீர்க்க தரிசனம்.
இதில் ஏழு என்கிற வார்த்தை பூரணத்தை குறிப்பதாக உள்ளது.
இப்படி அநேக சிறப்புகளைப் பற்றி அன்னாளின் ஜெபம், விசுவாசிகள் மத்தியில் நீங்காத இடம் பெற்றுள்ளது.
எசேக்கியேல் சண்முகவேல்