பார்வோனை வீழ்த்திய குழந்தையின் கண்ணீர்
உங்கள் சிந்தனைக்கு: பார்வோனை வீழ்த்திய குழந்தையின் கண்ணீர்
பார்வோன் யூதர்களை அழிக்க எந்த ஆயுதத்தைப் பயன்படுத்த முயற்சி செய்தானோ, அதே ஆயுதத்தால் அவன் விழுந்தான். சாத்தான் கையில் எடுத்த ஆயுதத்தைக் கொண்டு தான் கர்த்தர் அவனைத் தோற்கடித்தார்.
யூதக் குலத்தை முற்றிலும் அழிக்க, கருவறுக்கப் பிறந்த ஆண் குழந்தைகளைப் பார்வோன் கொன்று குவித்தான். ஆனால், அவனுடைய உத்தரவைத் தவிர்த்து உயிர் வாழ்ந்த ஒரு குழந்தையின் மூலமாகவே பார்வோன் வீழ்ந்தான். மோசேயின் குழந்தைப் பருவத்தில் நடந்த அனைத்தும் தேவனுடைய முன்கூட்டிய திட்டங்களின் பகுதிகளே.
நைல் நதி ஓரத்தில் நாணற் பெட்டியில் கிடந்த அந்தக் குழந்தையைப் பார்வோனின் குமாரத்தி கண்டாள். குழந்தை அழுதது. அந்த அழுகையின் மீது இரக்கம் கொண்டு பார்வோனின் குமாரத்தி குழந்தையை வளர்ப்பதற்காக, மோசேயின் அக்காவின் வழியாக, மோசேயின் தாயையே தாதியாக வைத்தாள். பின்னர், வளர்ந்த பிறகு, தாதியாக இருந்த தாயால் அந்தக் குழந்தை பார்வோனின் அரண்மனையில் ஒப்படைக்கப்பட்டது. அங்கு மோசே சகல கலைகளையும் கற்றுக் கொண்டான்.
இவை எதுவும் தற்செயலாக நடந்தவை அல்ல. அனைத்தும் தேவன் முன்குறித்த நிகழ்வுகளே. அந்தக் குழந்தை அன்றைக்கு அழாமல் இருந்திருந்தால், பார்வோனின் குமாரத்தி அதை வளர்த்திருக்க மாட்டாள். அந்தச் சிறு குழந்தையின் அழுகைதான் பார்வோனை வீழ்த்தியது.
ஒரு சிறு காரியத்தின் மூலம் தேவன் ஒரு மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை வீழ்த்தினார். உலகில் அற்பமான, புறக்கணிக்கப்பட்ட, எளிமையான மனிதர்களைத் தேவன் பயன்படுத்தி பெரிய காரியங்களைச் செய்யும் விதத்தைப் போலவே, அந்த மூன்று மாத குழந்தையின் அழுகையையும் கர்த்தர் ஒரு கருவியாகக் கொண்டார்.
அவர் யோசனையில் பெரியவர்.
தேவனால் தெரிந்து கொள்ள பட்டவனுடைய வாழ்க்கையில் எந்த நிகழ்வும் தற்செயலான காரியங்கள் அல்ல.
நாமும் நம்முடைய வாழ்க்கையில் தேவன் அனுமதிக்கும் எந்தக் காரியங்களையும் அலட்சியம் செய்யக் கூடாது. அவைகள் பல நேரங்களில் தேவனுடைய நீண்ட கால திட்டங்களாகக் கூட இருக்கலாம் என்பதை நாம் மறந்து விடக் கூடாது.
மூலக் கருத்து: W.W. Wiersbe அவர்களின் விளக்கத்தை அடிப்படையாகக் கொண்டது.
Ezekiel Shanmugavel