எபிரேயருக்கெழுதிய நிருபம் – ஒரு பார்வை
உங்கள் சிந்தனைக்கு: எபிரேயருக்கெழுதிய நிருபம் – ஒரு பார்வை
பிரசங்கத்தில் பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்ட நிகழ்வுகளையே அதிகமாக முக்கியப்படுத்தும் போதகர்கள் தியானிக்க வேண்டிய நூல் இது. மார்ட்டின் லூதர் கூட இந்தப் புத்தகத்தை ஆரம்பத்தில் தேவனால் அங்கீகரிக்கப்பட்ட வார்த்தையாக ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் இந்தப் புத்தகம் எழுதப்படாமல் இருந்திருக்குமானால், பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டிருக்கும் பல பதங்களுக்குப் புதிய ஏற்பாட்டின் வெளிச்சத்தில் அர்த்தம் தெரியாமல் இருந்திருக்கும்.
குறிப்பாகப் பலிபீடம், எருசலேம் தேவாலயம், ஆசாரியத்துவம், பலிகள், பிரதான ஆசாரியன் போன்ற வார்த்தைகளுக்கு இந்த மடலில்தான் சரியான ஆவிக்குரிய அர்த்தத்தைக் கண்டுகொள்ள முடியும். இந்த மடல் பழைய ஏற்பாட்டையும் புதிய ஏற்பாட்டையும் இணைக்கும் ஒரு பாலம்.
இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட பிறகு யூதர்களுடைய உபத்திரவத்தினால் இடறல் அடைந்து, தாங்கள் ஏற்றுக்கொண்ட சுவிசேஷம் சரியானதுதானா என்ற கேள்வியோடு உள்ள யூதர்களுக்கு, இயேசு கிறிஸ்து எப்படி யூத மார்க்கத்தைவிட, பழைய பிரமாணங்களைவிட மேன்மையானவர் என்பதை விவரிப்பதற்காக எழுதப்பட்டதுதான் இந்த நிருபம்.
இந்த நிகழ்வோடு தற்போதைய சூழ்நிலையை ஒப்பிட்டு இதைத் தியானிக்கலாம். இந்தக் கால சூழ்நிலையில், பிரசங்கத்தில் 90% பழைய ஏற்பாட்டு நிகழ்வுகளையே பேசும் போதகர்கள், பிரசங்கிகளுக்கு புதிய ஏற்பாட்டின் மேன்மையை அறிய இந்த நூல் அவசியம்.
இது ஒரு சிறந்த ஆவிக்குரிய மடல். ஆதி திருச்சபை கிறிஸ்தவர்களுக்கு, தாங்கள் ஏற்றுக்கொண்ட கிறிஸ்தவம் மேன்மையானதுதானா என்ற சந்தேகத்தைப் போக்க எழுதப்பட்டது. ஆனால் இன்றோ, பழைய ஏற்பாட்டைச் சுற்றியே பேசக்கூடிய, எழுதக்கூடிய போதகருக்கு – பங்கு பங்காகப் பல்வேறு நிலைகளில் சொல்லப்பட்ட வெளிப்பாடுகளைவிட, குமாரன் மூலம் வெளிப்படுத்தப்பட்டவை – இந்தக் கடைசி கால, புதிய ஏற்பாட்டு சத்தியங்கள் எவ்வளவு மேலானது, நித்தியமானது, பூரணமானது என்பதை உணர்ந்து கொள்ள இந்த நூல் அவசியமாகத் தியானிக்கப்பட வேண்டிய மடல்.
It is a better revelation. It is of eternal things. It is a perfect revelation.
எந்தப் பிரசங்கமானாலும் ஆபிரகாமைப் பற்றியும் தாவீதைப் பற்றியும் தானியேலைப் பற்றியும் யோசேப்பைப் பற்றியும் பேசுகின்ற போதகருக்கு, பவுலைப் பற்றியோ, பவுலின் மடல்களைப் பற்றியோ, பேதுருவைப் பற்றியோ, யோவானைப் பற்றியோ, பர்னபாவைப் பற்றியோ பேசுவது அரிதாகிவிட்டது.
இந்தக் குற்றச்சாட்டுக்கு எவ்வளவு பெரிய சபைகளும், எவ்வளவு பெரிய போதகர்களும் தப்பிக்க முடியாது. மிகப்பெரிய சபைகளில் கூட, மிகப்பெரிய போதகர் கூடத் தங்கள் பிரசங்கங்களில் பழைய ஏற்பாட்டைச் சுற்றியே வருவார்கள். புதிய ஏற்பாட்டின் சுவிசேஷங்களுக்கோ, அப்போஸ்தலர் நடப்படிகள் புத்தகத்திற்கோ, கடிதங்களுக்கோ எட்டிப் பார்ப்பது கூட அரிதான காரியமாக உள்ளது.
குமாரன் மூலம் உரைக்கப்பட்ட இந்தக் கடைசி கால செய்திகளை, வெளிப்பாடுகளை அதிகமாகத் தியானிக்க நாம் கடமைப்பட்டுள்ளோம். பழைய ஏற்பாட்டின் நிகழ்வுகளைப் போதிக்கிறவர்கள், அந்தச் சம்பவங்கள் எப்படி புதிய ஏற்பாட்டு சத்தியத்தோடு தொடர்புடையது என்பதையும் போதிக்க வேண்டும். அதுதான் என் சபையில் காணப்படவில்லை.
இந்த நூல் விசுவாசிகளின் ஆசாரியத்துவத்தை மிகத் தெளிவாகக் குறிப்பிடுகிறது. ஆசாரியத்துவ மாற்றத்தை நாம் நன்கு புரிந்து கொண்டால்தான் விசுவாசிகளை உண்மையான புதிய ஏற்பாட்டின் வெளிச்சத்திற்குள் வளர்க்க முடியும்.
இந்தக் கடிதத்தில் உள்ள 11வது மற்றும் 12வது அதிகாரத்தை மாத்திரம் அதிகம் தியானிக்கும் போதகர்கள், இதில் உள்ள முதல் ஒன்பது அதிகாரத்தில் உள்ள ஆவிக்குரிய உண்மைகளை அதிகமாகப் பேசுவதில்லை. இதற்காக நான் பழைய ஏற்பாட்டைப் பற்றித் தியானிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை; ஆனால், எந்த அளவுக்குப் பழைய ஏற்பாட்டு சத்தியங்களை, நிகழ்வுகளைக் குறித்து பிரசங்கத்தில் பேசுகிறீர்களோ, அதே அளவுக்குப் புதிய ஏற்பாட்டில் குமாரன் மூலமாக வெளிப்படுத்தப்பட்ட சத்தியங்களை சமநிலையோடு பிரசங்கிக்க நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.
“When you combine these three words — Better, Perfect, and Eternal — we can discover the better and eternal blessings and a perfect standing before God.” – W. W. Wiersbe
விசுவாசிகளின் தேவைகளை உணர்ந்தவனாக இந்தக் கட்டுரையை எழுதுகிறேன், யாரையும் மனம் புண்படும்படியாக அல்ல.