1 அரசர்கள் புத்தகம் வேத பாடம் 26
உங்கள் சிந்தனைக்கு:
1 அரசர்கள் புத்தகம் வேத பாடம் 26.
ஒபதியா என்கிற பெயரில் 12 நபர்களைக் குறித்து வேதம் குறிப்பிடுகிறது.அதில் இரண்டு பேர் மிகவும் குறிப்பிடத்தக்கவர்கள்.
1 அரசர்கள் புத்தகம் 18-வது அதிகாரத்தில் எலியாவின் காலத்தில் வாழ்ந்த ஒபதியாவும் , தீர்க்கதரிசியான ஒபதியாவும் குறிப்பிடத்தக்கவர்கள்.
இந்தப் பதிவில் எலியாவின் காலத்தில் வாழ்ந்த ஒபதியாவைக் குறித்து தியானிக்கலாம்.
அரசுப் பணியில் பணியாற்றுகின்ற ஒரு கிறிஸ்தவன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இவன் ஒரு நல்ல உதாரணம்.புதிய ஏற்பாட்டில் இயேசுவின் சரீரத்தை அடக்கம் செய்வதற்கு உதவி செய்த அரிமத்தியா பட்டணத்தைச் சேர்ந்த யோசேப்பு மற்றும் நிக்கொதேமுவும் போன்றவர்களும் தங்கள் அதிகாரத்தை எப்படி பயன்படுத்தலாம் என்பதற்கு சாட்சியாக இருந்தவர்கள்.இந்த ஒபதியா இஸ்ரவேல் தேசத்தை ஆண்ட ஆகாப் மன்னனுடைய ஆட்சியில் அரண்மனைக்குப் பொறுப்பாயிருந்தவன். ஒபதியா செல்வாக்கு மிகுந்த அதிகாரியாக இருந்தவன்.ஆகாபின் மனைவிதான் யேசபேல். இவள் தான் கடவுளுடைய தீர்க்கதரிசிகளை கொடுமைப்படுத்தி கொலை செய்வதற்கு காரணம். இஸ்ரவேல் தேசத்தில் சிலை வழிபாட்டை ஊக்குவித்தவள்.அந்தக் காலம் தேவனுடைய பிள்ளைகளுக்கு ஒரு கொடுமையான காலமாக இருந்தது. கர்த்தருடைய தீர்க்கதரிசிகள் மலைகளிலும் குகைகளிலும் ஒதுங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.மிகப்பெரிய வல்லமையான தீர்க்கதரிசியான எலியாவே அவளுக்குப் பயந்து சூரைச் செடியில் பதுங்கிய காட்சிகளை நாம் வேதத்தில் பார்க்கலாம்.
தேவனுடைய பிள்ளைகளுக்கும், தீர்க்கதரிசிகளுக்கும் இக்கட்டான காலம் அது.ஆனால் இந்தக் காலத்தில்தான் ஒபேதியா அரசாங்கத்திற்கு பயப்படாமல் தன்னுடைய விசுவாச கடமைகளை நிறைவேற்றினார்.
ஒபதியா நூறு இறைவாக்கு உரைப்பவர்களை அழைத்து இரண்டு குகைகளில் ஐம்பது ஐம்பது பேராக ஒளித்துவைத்து, உணவும் தண்ணீரும் கொடுத்துப் பாதுகாத்தான்.
அரசனுக்கும் விசுவாசமாக இருந்து அதே வேளையில் தேவனுடைய பிள்ளைகளையும், ஊழியர்களையும் பாதுகாத்த மிகப்பெரிய தைரியசாலி.
இன்றைக்கு ஒபேதியா போன்ற அரசு ஊழியர்களை இந்தக் காலத்தில் நாம் பார்ப்பது அரிதாக இருக்கிறது.கர்த்தர் கொடுத்த உயர்வை ஆசிர்வாதங்களை தேவனுடைய பணிகளுக்கும் தேவனுடைய பிள்ளைகளுக்கும் தைரியமாகத் தங்கள் கழுத்தைக் கொடுக்கக் கூடியவர்கள் வெகுசிலரே.அரசாங்கத்திற்கு உண்மையாக இருக்க வேண்டும் என்பது உண்மைதான்; அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.அதே வேளையில் தேவனுடைய அரசுக்கும் தேவனுடைய பிள்ளைகளுக்கும் பாதுகாப்பற்ற நிலை ஏற்படும்பொழுது அவர்களுக்குத் தைரியமாக உதவக்கூடிய கிறிஸ்தவ அதிகாரிகள் இன்றைக்கு நமக்குத் தேவை.அரசாங்கத்தில் சமீப காலங்களில் அரசு பதவிகளில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.எல்லோரும் பணத்திற்காகக் கம்ப்யூட்டர் படித்துவிட்டு வெளிநாடுகளிலும் இங்கே செழிப்பான MNC-ல் வேலைகளைத் தேடி ஓடி விடுகிறார்கள்.ஊழியக்காரர்கள் என்கிற போர்வையில் இருக்கும் அரசியல்வாதிகள் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்று அரசியல் குதிக்க ஆர்வம் காட்டுகிறார்கள் . அது தமிழகத்தில் ஏன் இந்தியாவிலும் ஒருக்காலும் ஒருக்காலும் சாத்தியமில்லை.
அதிகாரம் வேண்டுமென்கிற ஆன்மிகத் தலைவர்கள் தங்கள் விசுவாசிகளை ஊக்குவித்து அரசாங்கத்தின் உயர் பதவிகளில், குறிப்பாக மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், துணை ஆட்சியர், மருத்துவர்கள், பொறியாளர்கள் போன்ற பதவிகளில் கொண்டுவருவதற்கு முயற்சி செய்தால் அதுவே நாம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதாக எடுத்துக் எடுத்துக்கொள்ளலாம்
.இது புரியாமல் சாக்கடை அரசியலில் குதிக்க வேண்டும் என்று சொல்வது என்னைப் பொறுத்த அளவில் மதீயீனம்.இதைப் படிக்கின்ற போதகர்கள் அவைகளில் உள்ள விசுவாசிகளை அரசாங்கத்தில் உயர் பதவிகளில் வருவதற்கு அவர்களுக்கு உதவி செய்யுங்கள், உற்சாகப்படுத்துங்கள், பொருளாதாரத்தால் தாங்குங்கள். இதுவே நீங்கள் ஆண்டவருக்கு செய்கின்ற மிகப்பெரிய தொண்டு. நாமும் இந்தக் கடைசி காலத்தில் ஒபேதியா போல மனிதர்கள் அரசு பணிகளில் வருவதற்கு ஜெபிப்போமாக.
Ezekiel Shanmugavel