கர்த்தர் பார்வோனின் இருதயத்தை கடினப்படுத்தியதில் யூதர்களைக் குறித்த அவரின் நோக்கம்
:
உங்கள் சிந்தனைக்கு:
கர்த்தர் பார்வோனின் இருதயத்தை கடினப்படுத்தியதில் யூதர்களைக் குறித்த அவரின் நோக்கம்
கர்த்தர் பார்வோனின் இருதயத்தை கடினப்படுத்தியதற்கான காரணங்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.
1. பார்வோனைப் பொறுத்த அளவில்:
பார்வோன் தன் கடவுள்களின் மேல் வைத்திருந்த அனைத்து நம்பிக்கைகளையும் இழந்து, வெறுமையாக நிற்க வேண்டிய நிலைக்கு வர வேண்டும். தேவன் அனுப்பிய பத்து வாதைகளும் எகிப்து தேசத்தில் அவர்கள் கொண்டிருந்த மத நம்பிக்கையோடு மற்றும் கடவுள்களோடு தொடர்புடையவையாக இருந்தன. அந்தத் தெய்வங்கள் தன்னை காப்பாற்ற முடியாது என்பதை உணர்த்தும் நிலைக்கு அவன் தள்ளப்பட வேண்டும்.
2. உலகத்துக்கும் யூதர்களுக்கும் தேவனின் மெய்மையை வெளிப்படுத்துதல்:
யூதர்கள் வணங்கும், ஆராதிக்கும் கர்த்தரே மெய்யான சர்வ வல்லமையுள்ள கடவுள் என்பதை பார்வோனுக்கும், உலகத்திற்கும் நிரூபிக்க வேண்டும். ஆனால் இதே வேளையில், யூதர்களைக் குறித்தும் தேவனுக்கு ஒரு நோக்கம் உள்ளது.
இதைத் தான் யாத்திராகமம் 10:2ல் காணலாம்:
"“மேலும், நான் எப்படி எகிப்தியர்களைக் கடினமாய் நடத்தினேன் என்றும், எப்படி என் அடையாளங்களை அவர்கள் மத்தியில் செய்து காட்டினேன் என்றும் நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கும், உங்கள் பேரப்பிள்ளைகளுக்கும் சொல்லும்படியும், இதனால் நானே யெகோவா என்று நீங்கள் அறிந்துகொள்ளும்படியுமே இப்படிச் செய்தேன்” என்றார்.
யாத்திராகமம் 10:2
ஆம், யூதர்கள் தேவன் தங்களை விடுதலையாக்குவதற்காக எகிப்தியர்களின் மத்தியில் செய்த அதிசயங்களை, அற்புதங்களைத் தங்களோடு அடக்கிக் கொள்ளாமல், அவர்களுடைய பிள்ளைகளுக்கும் பிள்ளைகளின் பிள்ளைகளுக்கும் பரப்ப வேண்டும். இதுவும் தேவனுடைய நோக்கங்களில் ஒன்றாகும்.
அப்பொழுதுதான், அவர்கள் ஆராதிக்கும் முன்னோர்களின் கடவுள் மெய்யான கடவுள் என்பதையும், அவர்களின் தலைமுறை அறிந்து கொள்ளவும் முடியும்.
இதைத்தான் ஆண்டவர் ஆதி 18:19ல் தெளிவாகக் கூறுகிறார்.
ஆம், கர்த்தருடைய வழிகளையும், அவர் நம் குடும்பத்தில் காண்பித்த அதிசயங்களையும், அற்புதங்களையும் நம் பிள்ளைகளுக்கும், பிள்ளைகளின் பிள்ளைகளுக்கும் கடத்த வேண்டும் என்ற நிச்சயம் தேவனுக்கு இருக்க வேண்டும்.
கிறிஸ்தவ வாழ்க்கை என்பது ஒரு தொடர் ஓட்டம். நம் ஓட்டத்தை முடித்து, அடுத்த பகுதியைத் தொடர நம்முடைய பிள்ளைகளைப் பழக்கி வைக்க வேண்டும். அதுதான் பெற்றோர்களாகிய நம்முடைய பிரதான கடமை.
நாம் நம் பிள்ளைகளைத் தேவனுடைய கட்டளைக்கேற்ப நேராக வளர்க்காவிட்டால், அடுத்த கிறிஸ்தவ தலைமுறையை எதிர்பார்க்க முடியாது. இந்த எதிர்பார்ப்பை நாம் சரியாக நிறைவேற்ற வேண்டும்.
ஆபிரகாம் கட்டளையிடுவான் என்று ஆண்டவர் சொன்னது போல, நம் ஒவ்வொருவருடைய குடும்பத்தையும் கர்த்தர் குறித்த ஒரு சாட்சியாக எதிர்பார்க்கிறார்.
மல்கியா 2:15ல் தேவன் எதிர்பார்க்கும் காரியமும் இதுதான்.
நாம் தெய்வ பக்தி உள்ள சந்ததியை நம் குடும்பத்தில் உருவாக்கத் தவறினால், நம்மை அழைத்த தேவனின் நோக்கத்தை நிறைவேற்றத் தவறியவர்களாகவே காணப்படுவோம். எனவே, நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் பிரதான கடமை – நம்மையும் பாதுகாத்து, அடுத்த தலைமுறைக்கு நேராக நம்முடைய குடும்பத்தையும் நடத்த வேண்டும்.
நம் ஆவிக்குரிய ஓட்டம் 100 மீட்டர் ஓட்டம் அல்ல – அது ஒரு தொடர் ஓட்டம் (Relay).
ezekiel Ezekiel Shanmugavel