Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

1 அரசர்கள் புத்தகம் வேத பாடம் 28.
.
உங்கள் சிந்தனைக்கு:
1 அரசர்கள் புத்தகம் வேத பாடம் 28.

ஒன்று இராஜாக்கள் 17 மற்றும் 18 அதிகாரங்களில் எலியாவின் ஜெபங்களுக்கு கிடைத்த உடனடி பதிலும் தாமதமான பதிலும்.

எலியா தீர்க்கதரிசி பழைய ஏற்பாட்டில் மிக முக்கியமான தீர்க்கதரிசிகளில் ஒருவர். இந்தப் புத்தகத்தின் 17வது அதிகாரத்தில் திடீரென்று தோன்றி இஸ்ரவேல் ஜனங்களுக்கு ஆச்சரியத்தை அளித்தவர். தைரியமாக ஆகாப் அரசனிடம் வந்து, “அடுத்துவரும் சில வருடங்களுக்கு நான் சொன்னாலன்றி, நாட்டில் மழையோ பனியோ பொழிவதில்லை” என்று வீரமாகக் கூறினான் (ஒன்று இராஜாக்கள் 17:1). அவன் வாக்கின்படியே மழையும் பெய்யவில்லை.
அவன் தங்கியிருந்த வீட்டின் சொந்தக்காரியான விதவையின் மகன் நோயுற்று மரித்தான். இப்பொழுது எலியா பிள்ளையின் மேல் முகங்குப்புறமாகக் கிடந்து, “என் இறைவனாகிய யெகோவாவே! இந்தச் சிறுவனின் உயிர் இவனுக்குள் திரும்பி வரட்டும்” என்று கதறி அழுதான். கர்த்தர் எலியாவின் கூப்பிடுதலைக் கேட்டார். சிறுவனின் உயிர் திரும்பவும் அவனுக்கு வந்தது. அவன் உயிர் பெற்றான் (ஒன்று இராஜாக்கள் 17:22).
இங்கு எலியாவின் ஜெபத்திற்கு கர்த்தர் உடனடியாகப் பதிலளித்ததை பார்க்கலாம்.
கர்மேல் மலையில் நானூற்றைம்பது பாகால் தீர்க்கதரிசிகள் காலை முதல் மாலைவரை தாங்கள் கட்டிய பலிபீடத்தில் ஆடிக் குதித்தும், அவர்களால் நெருப்பை விண்ணிலிருந்து வரவழைத்துக் காளையைத் தகனம் செய்ய முடியவில்லை.

ஆனால் எலியா கர்த்தரை நோக்கி, “பதில் தாரும், யெகோவாவே, எனக்குப் பதில் தாரும்” என்று மன்றாடியபோது, யெகோவாவின் நெருப்பு இறங்கி பலியையும், விறகுகளையும், கற்களையும், மண்ணையும் எரித்து, வாய்க்காலிலிருந்த தண்ணீரையும் முழுவதுமாக வற்றச்செய்தது (ஒன்று இராஜாக்கள் 18:38).
இதுவரை நடைபெற்ற நிகழ்வுகளில் எலியாவின் விண்ணப்பத்திற்கு கர்த்தர் உடனடியாகப் பதில் அளித்ததை காணலாம்.

ஆனால், வருடங்கள் கழித்து, “நான் மழையை அனுப்பப் போகிறேன்” என்று கடவுள் எலியாவிடம் கூறினார். எலியாவும் அதனை ஆகாப் ராஜாவிடம் தெரிவித்தார். இருந்தும் மழை உடனடியாக வரவில்லை.
எலியா மலை உச்சிக்கு ஏறி, தனது முழங்கால்களுக்கு இடையில் தன் முகத்தை வைத்து, நிலம்வரை குனிந்து, கர்த்தரை நோக்கி விண்ணப்பித்தான். தனது வேலைக்காரனை நோக்கி, “மழை வருகிறதா?” என்று பார்க்கச் சொன்னான். ஆறு தடவைகள் பார்த்தும் மழை வரவில்லை. இருந்தும் அவன் விடவில்லை. கர்த்தர் சொன்னபடி: “நிச்சயமாக மழை வரும்.” எனினும், சும்மா இருந்துவிடாமல், மழை வரும்வரை அவன் ஜெபித்தே கொண்டிருந்தான். ஏழாவது தடவை வேலைக்காரன், “ஒரு மனிதனின் கை அளவுள்ள சிறிய மேகம் கடலிலிருந்து எழும்புகிறது” என்று கூறினான். அதுவரை கடவுளிடம் விண்ணப்பித்துக் கொண்டே இருந்தான்.

இதன் மூலம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்:

1. எப்போதும் நாம் ஜெபிக்கும் போதெல்லாம்
அதற்குப் பதில் உடனடியாகக் கிடைக்கும் என்று எண்ணக் கூடாது.


2. சில நேரங்களில் பதில் தாமதமாக வரலாம்.


3. தேவன் சில நேரங்களில் நமக்குச் சில காரியங்களைப் பற்றி வாக்குறுதி அளித்திருந்தாலும், அதை வைத்துக்கொண்டு சும்மா இருக்கக் கூடாது. அது நிறைவேறும் வரை நாம் தொடர்ந்து ஜெபித்துக் கொண்டே இருக்க வேண்டும்.



இந்தக் கொள்கை விசுவாசிகளுக்கும், எவ்வளவு பெரிய வரம் பெற்றஊழியக்காரர்களுக்கும் பொருந்தும். நம் வாழ்க்கையில் சில காரியங்களுக்காக இடைவிடாமல், கர்த்தர் நமக்குக் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேறும் வரை ஜெபிக்க வேண்டியதுதான் தேவனுடைய விருப்பம். அதையே எலியாவின் வாழ்க்கையில் நாம் காணலாம்..