Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

காலேபு ஏன் எபிரோனை விரும்பிக் கேட்டுக் கொண்டான்?
உங்கள் சிந்தனைக்கு: Tamil Bible Study

காலேபு ஏன் எபிரோனை விரும்பிக் கேட்டுக் கொண்டான்?

"இந்த மலைநாட்டை எனக்குத் தாரும்" — யோசுவா 14:12
எகிப்து தேசத்தை வேவு பார்க்க அனுப்பப்பட்ட 12 நபர்களில், 10 நபர்கள் கானான் தேசத்தில் வசிக்கும் மக்கள் பெரியவர்கள் என்றும், அங்கே வசிக்கும் ஏனாக்கின் குமாரர்கள் ராட்சதர்கள் என்றும் கூறி மக்களின் விசுவாசத்தை பலவீனப்படுத்தினார்கள். ஆனால் யோசுவாவும் காலேபும் மட்டும், அந்தத் தேசத்தை எளிதாகக் கைப்பற்றி விடலாம் என்ற விசுவாச அறிக்கையிட்டார்கள்.
40 ஆண்டுகளுக்குப் பிறகு, புதிய சந்ததி கானானுக்குள் நுழைந்தது. அவர்கள் கானானில் முக்கியமான ஜாதிகளை விரட்டியடித்து அந்த நிலங்களைக் கைப்பற்றினார்கள். இப்போது அந்த நிலங்களை ஜனங்களுக்குள் பங்கிட வேண்டியது ஏற்பட்டது.
எப்படி பங்கிட வேண்டும்?
எண்ணா 26:55ல், ஆண்டவர் தெளிவாக விளக்குகிறார்:
ஒவ்வொரு கோத்திரத்திற்கும் உள்ள மக்கள் தொகையின் அடிப்படையில் நிலத்தின் அளவு நிர்ணயிக்கப்படும். ஆனால் எந்த இடம் யாருக்கெனத் தீர்மானிக்கப்படும் என்பது சீட்டு (lot) போடுவதன் மூலம் முடிவு செய்யப்படும்.

"Size was determined by the number, but location was determined by lot."
இந்த முறையின் படியே அனைத்து கோத்திரங்களுக்கும் இடங்கள் வழங்கப்பட்டன.

காலேபு யூதா கோத்திரத்தைச் சேர்ந்தவன். முதல் முறையாகக் கானான் தேசத்தைப் பிரித்துக் கொடுத்தபோது, அந்த வரிசையில் முதலாவதாக யூதா கோத்திரம் வந்தது. ஆனால் யூதா கோத்திரத்துக்கான நிலத்தை வழங்கும் முன்பாகவே, காலேபு மலைநாடான எபிரோனை விரும்பிக் கேட்டான். அந்த இடத்தில் ஏனாக்கியரின் குமாரர்கள் இன்னும் வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.
45 ஆண்டுகளுக்கு முன்பு, இஸ்ரவேல் ஜனத்தின் முன்னிலையில் மோசே கொடுத்த வாக்குறுதியை நினைவுபடுத்தி, அந்த இடத்தைக் கேட்கின்றான் (உபா 1:34–36).
ஏன் எபிரோன்?
இந்த எபிரோன் மலைநகரம், யூதருடைய வரலாற்றில் சிறப்பான இடமாக உள்ளது. இங்குத் தான் காலேபின் முற்பிதாக்களான ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு வாழ்ந்தார்கள். மேலும், சாராளின் கல்லறையும் இங்குதான் உள்ளது (ஆதி 13:18; 23:17–20; 35:27).
தன் இனத்தோடு தொடர்புடைய இந்தத் இடம் ஏனாக்கியரின் கைகளில் இருப்பது காலேபுக்கு ஏற்றதாக இல்லையென்றும், அதனால் அந்த இடத்தை விரும்பினானென நம்மால் யூகிக்கலாம். தேவன் தன்னுடன் இருப்பின் எதிரிகளை எளிதில் வெல்லலாம் என்று நம்பிய காலேபு (எண் 14:8), தன் சொன்ன விசுவாச அறிக்கையை வாழ்க்கையின் இறுதி காலத்திலும் நிறைவேற்ற விரும்பினான்.
விசுவாச வீரன் காலேபு
வேதத்தில் காலேபு கடவுளை “உத்தமமாய் பின்பற்றினவன்” என்று ஆறு தடவைகள் சொல்லப்படுகிறது. அவன் ஒரு விசுவாசமுள்ளவனாகவும், தன் இனத்தின் வரலாற்றைப் பாதுகாக்கும் வைராக்கியமுள்ளவனாகவும் விளங்குகிறான்.

யோசுவா 15வது அதிகாரத்தில் தான் யூதா கோத்திரத்துக்கான இடம் தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் யோசுவா 14:12ல், யூதா கோத்திரத்துக்கான சீட்டு போடுவதற்கு முன்பாகவே காலேபு எபிரோனை கேட்டதாக நமக்குத் தெரிகிறது.

காலேபின் விருப்பத்தின் அடிப்படையில், சீட்டு விழுந்திருக்க வேண்டும்.
அல்லது, யோசுவா, மோசே அளித்த வாக்குறுதியை நினைவுகூர்ந்து, சீட்டுப் போடும் முறையைப் பின்பற்றாமல் நேரடியாக யோசுவா கொடுத்திருக்கலாம்.

செயலில் காணப்பட்ட விசுவாசம்
காலேபு ஏனாக்கியரின் குமாரரை அந்த இடத்திலிருந்து வெற்றிகரமாக வெளியேற்றினான் (யோசு 15:13–17). விசுவாசத்தோடு சொன்ன காரியத்தைச் செயலால் நிரூபித்தான்.

நம் வாழ்வுக்கும் பாடம்
நாம் தேவனுக்குத் தூய்மையாய் நடக்கும்போது, காலம் கடந்தாலும் நாம் விசுவாசத்தில் சொன்ன காரியங்களைத் தேவன் நமக்கு வாய்க்கச் செய்வார்.
தேவனுடைய அரசாங்கம் வெறும் பேச்சில் அல்ல.
இன்றைய அரசியல் சூழ்நிலையில், ஒவ்வொரு விசுவாசியும் தங்கள் வேலையிடங்களில் காலேபாக மாறி, "தேவன் நம்மோடு இருக்கிறார்" என்பதை உலகத்துக்கு வெளிப்படுத்தும் பொறுப்புள்ளவர்களாக வாழ்வோம்.!

பயன்படுத்திய நூல்கள்:
Devotional Commentary – Lawrence O. Richards
Believer's Commentary – William MacDonald
South Asia Bible Commentary
The Bible Exposition Commentary – Warren W. Wiersbe
Bible Handbook – Harold Wilmington