Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

1 அரசர்கள் புத்தகம் – வேத பாடம் 29
உங்கள் சிந்தனைக்கு:
1 அரசர்கள் புத்தகம் – வேத பாடம் 29
"என்னை எடுத்துக் கொள்ளும்" என்று வேண்டினான் எலியா. மரிக்காமலே எடுத்துக் கொண்டார் ஆண்டவர்.

கடவுள் போதிக்கும் பாடங்கள்

எவ்வளவு பெரிய மனிதர்களாக இருந்தாலும், அவர்களுடைய பலவீனங்களையும், தோல்விகளையும், ஏமாற்றங்களையும் வேதம் பதிவு செய்து வைத்திருக்கிறது.
நம் விசுவாச தந்தையான ஆபிரகாம் கடவுளை நம்பாமல் எகிப்திற்கு சென்ற நிகழ்வு, காதேசில் சாந்த குணம் கொண்டவனான மோசேயின் ஒரு நிமிட கோபம், தாவீதின் பலவீனங்கள் – இவை அனைத்தும் கடவுளின் மக்களாக இருந்தாலும், அவர்களது தோல்விகள் மறைக்கப்படாமல் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
எலியாவின் வாழ்வில் வல்லமையும், வீழ்ச்சியும்
1 அரசர்கள் 18வது அதிகாரத்தில், எலியா தனியாகப் பாகாலின் தீர்க்கதரிசிகளை எதிர்த்து, நெருப்பால் பதிலளிக்கும் யெகோவாவே கடவுள் என்று மக்களின் முன்னிலையில் தேவனின் வல்லமையை வெளிப்படுத்தினார்.
இது ஒரு சாதாரண காரியம் அல்ல. தேவனின் மகிமையை உலகத்திற்கு கொண்டு வந்தவர் எலியா.
ஆனால் அடுத்த அதிகாரத்தில், யேசபேல் எலியாவிடம் ஒரு ஆளை அனுப்பி, “நாளை இந்நேரம் நீ அவர்களுக்குச் செய்ததுபோல் உன் உயிருக்கும் செய்யாவிட்டால், தெய்வங்கள் என்னைத் தண்டிக்கட்டும்” என்று பயமுறுத்தினாள். இதைக் கேட்ட எலியா, தன் உயிரைக் காக்க தப்பி ஓடினான்.
450 பாகாலின் தீர்க்கதரிசிகளை எதிர்த்த எலியா, யேசபேலின் மிரட்டலை சமாளிக்க இயலவில்லை. சூரைச்செடியின் கீழ் அமர்ந்து, “யெகோவாவே, நான் பட்ட பாடு போதும்; என்னுடைய உயிரை எடுத்துக் கொள்ளும்” என்று கதறினார் (1 இராஜாக்கள் 19:4).

வெற்றியிலும், வீழ்ச்சியிலும் தேவமனிதர்கள்.

18வது அதிகாரத்தில் எலியா இஸ்ரவேலின் கவனத்தை பெற்றிருந்தார். ஆனால் 19வது அதிகாரத்தில், ஆவிக்குரிய மிகப்பெரிய வீழ்ச்சியைச் சந்தித்தார். இது அனைத்து விசுவாசிகளுக்கும், ஆவிக்குரிய தலைவர்களுக்கும் ஏற்படக்கூடிய ஒன்று.
வெற்றியில் தலைவர்களைக் கதாநாயகனாகப் பார்க்கிறோம். ஆனால் அவர்களது தனிப்பட்ட வாழ்வில் ஏற்படும் இமாலயத் தோல்விகள் நம் கண்களுக்குத் தெரியாது. எனவே, யாரையும் வைத்து விசுவாசத்தில் ரசிகனாக மாறக் கூடாது.
18வது அதிகாரத்தில் எலியா கடவுளை விசுவாசித்து பின்பற்றினார். ஆனால் 19வது அதிகாரத்தில் தேவனை தரிசித்தபின் நடக்க ஆரம்பித்துத் தோல்வியைச் சந்தித்தார். பாகாலின் தீர்க்கதரிசிகள் முன் தன்னை உயர்த்திய தேவன், யேசபேலின் முன் தன்னை மகிமைப்படுத்துவார் என்ற விசுவாசம் இல்லை.
சுற்றுச்சூழலுக்கு பதிலாகக் கடவுள் வைத்த இடத்தில் இருங்கள்
கடவுள் வைத்த இடத்தில் இல்லாமல், எலியா ஓரேபுக்கு தப்பிச் சென்றார். விசுவாசிக்குப் பாதுகாப்பான இடம் எது தெரியுமா? தேவன் வைத்த இடம்தான். பார்வைக்கு ஆபத்தாக இருந்தாலும், அது விசுவாசிக்கும் மிகுந்த பாதுகாப்பான இடமாக இருக்கும். இதை எலியா புரிந்து கொள்ள தவறினார்.

கிருபையும் நம்பிக்கையும்

ஆனால் கடவுள், எலியாவின் பலவீனங்களை எடுத்துக்கொண்டார். அவரது வேண்டுகோளை உடனே நிறைவேற்றவில்லை. அதற்குப் பிறகும், அவனுக்குப் பல கிருபைகளை அளித்து ஊழியத்தில் நிலைபெற வைத்தார்.
இன்றும் வேதத்தில் எலியாவுக்கு ஒரு தனி இடம் உள்ளது.
எலியா “என்னை எடுத்துக் கொள்ளும்” என்று கூறினார். கடவுள் அவனை மரணமின்றி எடுத்துக் கொண்டது ஆச்சரியமானது.
சிறிது நேரம், சூழ்நிலை காரணமாக “என்னை எடுத்துக் கொள்ளும்” என்று சொல்பவர்கள்மீது கர்த்தர் கோபப்பட மாட்டார். அவர் அவர்களையும் நிலைப்படுத்தி, தம்முடைய நோக்கத்தை நிறைவேற்றுவார்.