2 அரசர்கள் புத்தகம் – வேத பாடம் 2
2 அரசர்கள் புத்தகம் – வேத பாடம் 2
எலிசாவின் முதல் அற்புதம் சொல்லும் பாடம் என்ன?
எலியா மறைந்த உடன், எலிசா நிகழ்த்திய முதல் அற்புதம் – யோர்தான் நதியின் தண்ணீரை அடித்து அதை இரண்டாகப் பிரித்தது – மிக முக்கியமானதாகும். அதே நாளில் அவனுடைய ஆன்மீகக் குருவான எலியா, இதேபோல் தன்னுடைய சால்வையை எடுத்துத் தண்ணீரை அடித்து யோர்தானை இரண்டாகப் பிரித்தார்.
இருவரும் ஒரே அற்புதத்தை நிகழ்த்தினாலும், இதில் ஒரு முக்கியமான வித்தியாசம் இருக்கிறது:
எலியா தன்னுடைய சால்வையை கொண்டு தண்ணீரை அடித்தார்.
எலிசா, எலியா பரலோகத்துக்கு எடுத்துச் செல்லப்படுகையில் அவனுடைய சால்வை தன்னிடம் விழுந்ததை எடுத்துக் கொண்டு அதனை பயன்படுத்தினான்.
எலிசா, எலியாவின் வழிமுறையை பின்பற்றினான். ஆனால், அதோடு மட்டுமின்றி, "எலியாவின் தேவனாகிய யெகோவா இப்போது எங்கே?" என்று கேட்டபடி, தேவனை மையப்படுத்தி தண்ணீரை அடித்தபோது, அது வலது பக்கமாகவும் இடது பக்கமாகவும் பிரிந்தது.
இதிலிருந்து நாம் இப்படி ஒரு பாடத்தைப் பெறுகிறோம்:
முந்தைய தலைமுறையின் வழிமுறைகளை பின்பற்றுவது தவறு அல்ல. ஆனால் அந்த வழிமுறைகள் வழியாக கடவுளின் நாமம் மகிமைப்பட வேண்டும். கடவுளே மையமாக இருக்க வேண்டும்.
பல அமைப்புகளில், முன்னோடியான தலைவர்கள் பின்பற்றிய வழிகளை நூற்றுக்கு நூறு சதவீதம் பின்பற்றுகிறார்கள். ஆனால், அந்த வழிமுறைகளில் கடவுளே மையப்படுத்தப்படுவதில்லை. பழைய தலைவர்களின் சிந்தனைகள் மற்றும் கோட்பாடுகள், தற்போதைய தலைமுறையையும் "ரிமோட் கண்ட்ரோல்" போல ஆள்கிறதாகவே தெரிகிறது.
புதிய தலைவர்கள், தேவனுடைய சித்தத்தை அறிந்து, அவரையே மையமாக வைத்து, தங்களை முழுமையாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்து நடக்க வேண்டும்.
எலிசா, எலியாவின் சால்வையை எடுத்தது உண்மைதான். ஆனால், அதை பயன்படுத்தும் பொழுது தேவனை உயர்த்தினான். தன் எஜமானனைப் போலவே, அவனும் தனது முதல் நிகழ்வில் மிகப்பெரிய அதிசயத்தைச் செய்தான். He made a difference.
முந்தைய தலைமுறை செய்ததை நாம் ஒரே மாதிரியாகவே செய்ய வேண்டும் என்பதில்லை. தேவனுடைய சித்தத்தின் படி, புதிய தலைமுறை, புதிய மாற்றங்களை, காலத்துக்கேற்ப உருவாக்க வேண்டும்.
Ezekiel Shanmugavel