Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

2 அரசர்கள் புத்தகம் – வேதப் பாடம் 13
உங்கள் சிந்தனைக்கு:

2 அரசர்கள் புத்தகம் – வேதப் பாடம் 13

யெகூவின் மறுபக்கம்:

இஸ்ரவேல் தேசத்தை ஆண்ட மன்னர்கள் அனைவரும் தேவனுக்கு பிரியமில்லாத வழியில் வாழ்ந்தவர்கள். ஆனால் யெகூ மட்டும் அதற்கு விதிவிலக்கு. இஸ்ரவேல் ஆண்ட அரசர்களில் அதிக ஆண்டுகள் அரியணைக் கட்டிலில் இருந்தவன் யெகூ. 28 ஆண்டுகள் அரசனாக ஆட்சி புரிந்தான்.
யெகூவை தெரிந்துகொண்டதற்கான முக்கிய காரணம்:

இஸ்ரவேல் தேசத்தில் ஆகாப் மன்னனும் அவன் மனைவி யேசபெலும் செய்த பாவங்களுக்காக அவர்களைத் தேவன் நிர்மூலமாக்குவதற்காகத்தான்.
இவர்கள் தேவனுடைய ஜனங்களை வழிவிலக்கச் செய்து பாகால்களை தொழுதுகொள்ளும்படியாகச் சூழ்நிலை ஏற்படுத்தினார்கள். தேவனுடைய தீர்க்கதரிசிகளை கொலை செய்தார்கள்.
எனவே கடவுள் ஆகாபையும் அவன் குடும்பத்தையும் முற்றிலுமாக அழிக்க யெகூவை தெரிந்துகொண்டார்.

யெகூ அந்தப் பணியை முழுமையாகச் செய்து முடித்தான். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

"ஆகாபுடைய வீட்டுக்கு எதிராக யெகோவா சொன்ன ஒரு சொல்லாவது நிறைவேறாமல் போகாதபடிக்கு அனைத்தையும் யெகூ செய்து முடித்தான்" (2 இராஜாக்கள் 10:10).

அதற்காகத் தேவன் அவனுடைய நான்கு தலைமுறைகள் இஸ்ரவேல் தேசத்தை ஆட்சி செய்யும்படியாக ஆசீர்வதித்தார்.
இது யெகூவின் ஒரு பக்கம்.

ஆனால் இவன் தனக்கு அனுமதித்த வரம்பை மீறினான்.
சம்பந்தமில்லாத ஆகாபின் தூரத்து உறவினர்களையும் அரசியல் நண்பர்களையும் கொலை செய்தான் (2 இராஜாக்கள் 10:11,17).
யூதாவின் அரசனான அகசியாவின் உறவினர்களையும் கொலை செய்தான்.
இந்த வரம்பு மீறிய செயல்தான் ஓசியா தீர்க்கதரிசியும் குறிப்பிட்டுள்ளார் (ஓசியா 1:4).

கடவுள் அனுமதித்த அளவை மீறி செயல்படும் எந்த விசுவாசிகளையும், ஊழியர்களையும் தேவன் தண்டிக்காமல் விடுவதில்லை என்பதற்கு யெகூவின் வாழ்க்கை நமக்கு ஒரு எச்சரிக்கை.
விசுவாசிகளோ, ஊழியர்களோ கடவுள் நமக்கு அனுமதிக்கும் எல்லையை முதலில் அறிந்திருக்க வேண்டும்.
எந்த ஒரு காரியமாக இருந்தாலும், ஏன் மற்றவர்களைக் குறை சொல்லக்கூடிய கருத்தாக இருந்தாலும், கண்டிக்கக்கூடிய நிகழ்வாக இருந்தாலும் கூட நமது எல்லையை நாம் மீறக் கூடாது (நமது குற்றச்சாட்டுகள் நியாயமானவையாக இருந்தாலும்).
மோசேயின் சரீரத்தை குறித்து சாத்தான் தர்க்கித்தபோது மிகாவேல் தன்னுடைய எல்லையை மீறவில்லை.
இந்தப் பாடத்தை இன்றைய வாலிப விசுவாசிகள் புரிந்துகொள்ள வேண்டும்.
எந்த ஒரு காரியமாக இருந்தாலும் நமக்கு அளித்திருக்கும் எல்லையை உணர்ந்து செயல்பட்டால் நல்லது.
உபதேசம் சம்பந்தப்பட்ட காரியங்களைத் தவிர மற்ற காரியங்களில் கடவுள் நமக்கு அளித்திருக்கும் எல்லையை ஒரு காலத்திலும் தாண்டக் கூடாது.
இது ஒரு “Spiritual Excess”.

Trespassers will be prosecuted என்பது ஆவிக்குரிய வாழ்க்கைக்கு பொருந்தும்.