Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

2 அரசர்கள் புத்தகம் – வேதபாடம் 21
உங்கள் சிந்தனைக்கு.

2 அரசர்கள் புத்தகம் – வேதபாடம் 21

சபையின் சீர்திருத்தம் எங்கே ஆரம்பிக்க வேண்டும்?
சபையின் சீர்திருத்தம் விசுவாசிகளிடத்தில் வசனத்தைப் பற்றிய தீராத தாகத்தை உருவாக்குவதிலிருந்து தொடங்க வேண்டும். அதன் விளைவாக, காலத்திற்கு ஒவ்வாத பயனற்ற பாரம்பரியங்களையும் சடங்காச்சாரங்களையும் அகற்ற வேண்டும். கடவுளின் கிருபையை மேன்மைப்படுத்தாத, அதே நேரத்தில் மனித முயற்சிகளைக் குறைத்து மதிப்பிடும் போதனைகளைப் புறம்பே தள்ள வேண்டும்.
ஒரு உண்மையான சீர்திருத்தவாதி இந்த இரண்டு கடமைகளையும் நிறைவேற்றுவனாக இருப்பான். சபை வரலாற்றில் இதற்கு மிகச் சிறந்த உதாரணம் மார்ட்டின் லூத்தர். பழைய ஏற்பாட்டில் மிகப்பெரிய சீர்திருத்தவாதி எசேக்கியா அரசன்.
பழைய ஏற்பாட்டில் எசேக்கியா ராஜா, ஜனங்கள் மத்தியில் காணப்பட்ட தேவையில்லாத பாரம்பரியங்களை உடைத்து தள்ளியவர். அவன் மோசே செய்த வெண்கலப் பாம்பைத் துண்டு துண்டாக உடைத்தான். அன்றுவரை இஸ்ரவேலர் அதற்குத் தூபம் காண்பித்து வந்தனர். அந்தப் பாம்பு “நெகுஸ்தான்” என்று அழைக்கப்பட்டது (2 இராஜா 18:4).
அதன் வரலாறு:
இஸ்ரவேல் ஜனங்கள் ஓர் மலைத்தொடரிலிருந்து செங்கடலுக்குச் செல்லும் வழியில், ஏதோம் தேசத்தைச் சுற்றிப் பயணம் செய்தார்கள். இதனால் அவர்கள் சலித்துப் போய், தேவனுக்கு விரோதமாக முறுமுறுத்தினார்கள். அப்போது கடவுள் விஷப்பாம்புகளை அனுப்பினார். அவை மக்களைக் கடித்ததால், பலர் இறந்தார்கள் (எண்ணாகமம் 21:6).
பின்னர் ஜனங்கள் தங்கள் பாவத்திற்காக மனம் வருந்தியபோது, கடவுள் மோசேயிடம்:
“நீ ஒரு பாம்பைச் செய்து, அதை ஒரு கம்பத்தின் மேல் உயர்த்தி வை. கடிக்கப்பட்டவன் அதைப் பார்த்தால் பிழைப்பான்” (எண்ணாகமம் 21:8) என்று கட்டளையிட்டார்.
அதன்படி வெண்கலப் பாம்பு செய்யப்பட்டது. அதைப் பார்த்தவர்கள் உயிர் பிழைத்தார்கள். ஆனால் பின்னாளில், அந்த வெண்கலப் பாம்பையே இஸ்ரவேல் ஜனங்கள் சரீர சுகத்திற்காக வணங்க ஆரம்பித்தனர். இந்த நடைமுறை யோசுவா, தாவீது, சாலொமோன் காலத்திலிருந்தும் எசேக்கியா காலம் வரையும் தொடர்ந்தது.
ஆனால் இந்த நடைமுறையை முற்றிலும் நிறுத்தியவர் எசேக்கியா.
இதில் ஒரு பெரிய சிந்தனை உண்டு:
யோசுவா மிகச் சிறந்த தளபதி மற்றும் நிர்வாகி; தாவீது மிகச் சிறந்த ஆராதனை வீரன்; சாலொமோன் மிகுந்த ஞானமுள்ளவர். இருந்தாலும் தேவனுக்கு விரோதமான இந்த உருவவழிபாட்டை அவர்கள் ஒழிக்க முன்வரவில்லை. ஒருவேளை மக்களின் கோபத்தை சம்பாதிக்காமல் இருக்க அவர்கள் அச்சப்பட்டிருக்கலாம்.
ஆனால் எசேக்கியா அப்படியல்ல. வேதம் கூறுகிறது:
“அவன்போலக் கர்த்தர்மேல் நம்பிக்கை வைத்த ராஜா யாரும் இஸ்ரவேலில் இல்லை”.
சாலொமோன் பிறகு அரசாண்ட ராஜாக்களில் எசேக்கியாவைப் பற்றிய விவரங்களே அதிகமாக வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

சுமார் 700 ஆண்டுகளாக நடந்துவந்த விக்கிரக வழிபாட்டை எசேக்கியா ராஜா தன்னுடைய ஆட்சி காலத்தில் ஒழித்தார்.
எவ்வளவு பெரிய சீர்திருத்தவாதி என்பதைக் கவனியுங்கள்!

ஒரு விதத்தில் எசேக்கியா ராஜா தாவீது, சாலமோனன் இவர்களை விட பெரிய தைரியசாலி.


இதுபற்றி வேதம் கூறுகிறது:
“தேங்கிக் கிடந்த அசுத்தங்களை எல்லாம் வெளியே கொண்டு வந்தார்கள்” (2 நாளாகமம் 29:16).

இன்றும் பல சிறந்த வேதாகமப் போதகர்கள் இருக்கிறார்கள். ஆராதனை வீரர்கள், சிறந்த பாடகர்கள், ஆழ்ந்த வேதாகம வியாக்கியானம் செய்பவர்கள் இவர்கள் எல்லோரும் சபைகளில் இருக்கிறார்கள். இது மகிழ்ச்சி தரும் விஷயம்.

ஆனால், அவர்கள் சபைகள் பின்பற்றும் தேவையில்லாத சடங்குகள், பாரம்பரியங்கள், பயனற்ற பழக்கவழக்கங்களைத் தொடவே அஞ்சுகிறார்கள்.

மறுமலர்ச்சி (revival) சபைகளில் நிகழ்வதற்கு முன்னர், பல நூற்றாண்டுகளாகக் குவிந்து கிடக்கும் இந்த “மதக் குப்பைகள்” அகற்றப்பட வேண்டும்.
ஆகையால்:
நல்ல போதகர்கள் தைரியமுள்ள போதகர்களாக மாற வேண்டும்.
சபைகளில் காணப்படும் சடங்குகள், பாரம்பரியங்கள் போன்ற தேவையில்லாதவற்றை எரித்துச் சாம்பலாக்கத் துணிவுள்ள ஊழியர்கள் தேவை.


"உண்மையான மறுமலர்ச்சிக்காகச் சுத்திகரிப்பு அவசியம்.
ஆண்டுகளாகத் தனிநபர்களும் சபைகளும் ஆவிக்குரிய ஆராதனையின் அத்தியாவசியங்களை புறக்கணித்து, மத சம்பந்தமான குப்பைகளை மெதுவாகச் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
கர்த்தரிடமிருந்து புதிய ஆசீர்வாதம் பெறுவது, புதுமையான காரியங்களைச் செய்வதினால் அல்ல. மாறாக பூர்வ பாதைகளுக்கு திரும்பிச் சென்று, அவற்றைச் சிறப்பாகச் செய்வதினாலே சபைகளில் மறுமலர்ச்சி நிகழும்."
டபிள்யூ. வியர்ஸ்பி (W.W. Wiersbe)


எசேக்கியேல் சண்முகவேல்