2 அரசர்கள் புத்தகம் வேத பாடம் 27
உங்கள் சிந்தனைக்கு.
2 அரசர்கள் புத்தகம் வேத பாடம் 27
2 ராஜாக்கள் புத்தகத்தை முழுமையாக அறிந்து கொள்ள வேண்டுமென்றால் அதனோடு சம்பந்தப்பட்ட நாளாகம புத்தகங்களைச் சேர்த்து படிக்க வேண்டும்.
அப்படி படிக்கும்பொழுது 2 ராஜாக்கள் புத்தகத்தில் வருகின்ற
அசரியா (Azariah) ராஜாவும் 2 நாளாகம புத்தகத்தில் வருகின்ற உசியா (Uzziah) ராஜாவும் ஒரே ராஜா தான் என்று அறிய முடிகிறது.
வேதாகமத்தில் (2 இராஜாக்கள் 14:21; 15:1-7; 2 நாளாகமம் 26:1-23) அவர் பெயர் இரண்டுவிதமாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது:
அசரியா என்றால் எபிரேயத்தில் – “யாவே உதவுகிறார்” "Jehovah has helped"என்று பொருள்)
உசியா என்றால் எபிரேயத்தில் ʿUzzīyāh – “யாவே வல்லமை” "Jehovah is my strength " என்று பொருள்.
பெயரின் அர்த்தத்தில் சிறிய வித்தியாசம் இருந்தாலும், இருவரும் ஒரே நபர் என்பதை வரலாறு மற்றும் வேதம் உறுதிப்படுத்துகிறது.
உதாரணமாக:
2 இராஜாக்கள் 15:1–2 இல் அவர் “அசரியா” என்று அழைக்கப்படுகிறார்.
2 நாளாகமம் 26:1 இல் அவர் “உசியா” என்று அழைக்கப்படுகிறார்.
உசியா அரசனின் வாழ்க்கை நமக்கு ஒரு எச்சரிக்கை.
கடவுள் தன்னை அழைக்காத இடத்த்திற்கு செல்ல நினைப்பதும், தேவன் தனக்கு கொடுக்காத பணியைச் செய்ய முயற்சி செய்வதும் எவ்வளவுஆபத்தானது என்பதற்கு உசியா அரசனின் வாழ்க்கை ஒரு எச்சரிக்கை.
அவன் கர்த்தரை தேடின ஒரு அரசன்.
52 ஆண்டுகள் ஆட்சி செய்தான்.
அவன் யெகோவாவைத் தேடிய காலமெல்லாம் இறைவன் அவனுக்கு வெற்றியைக் கொடுத்தார்.
தன்னுடைய நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தினான்.
ராணுவ தளவாடங்களை உற்பத்தி செய்தான்
இராணுவவீரர்களுக்குத் தலைமைவகிக்க 2600 குடும்பத் தலைவர்களை உருவாக்கினான்.
அவர்களின் தலைமையின் கீழ் 3,07,500 மனிதர் யுத்தத்திற்காகப் பயிற்றுவிக்கப்பட்டிருந்தனர். அது அரசனுக்கு உதவிசெய்யவும், அவனுடைய பகைவர்களை எதிர்க்கவும் வல்லமையுள்ள படையாக இது இருந்தது.
2 நாளாகமம் 26:13
வன் விவசாயத்தை விரும்பினான்.
அம்மோனியர் உசியாவுக்கு வரி கொண்டுவந்தார்கள். அவனுடைய புகழ் எகிப்தின் எல்லைவரை பரவியிருந்தது.
ஏனெனில் அவன் மிகவும் பலம்பொருந்திவனாய் இருந்தான்.
இப்படியாக அவனுடைய ஆவிக்குரிய ஓட்டம் நன்றாக ஓடிக் கொண்டிருந்தது.
இந்த நிலையில்தான் அவனுடைய அகந்தை அவனுக்கு வீழ்ச்சியை ஏற்படுத்தியது.
பழைய ஏற்பாட்டைப் பொறுத்த அளவில் ஆசாரிய பணி என்பது ஆரோனின் குடும்பத்திற்குரியது. மோசேயின் சட்ட திட்டங்கள்படி ஒரு அரசனோ, தீர்க்கதரிசியோ ஆசாரிய பணியைச் செய்ய முடியாது. அதே வேளையில்
ஆசாரியன் தீர்க்கதரிசியாக மாறலாம்.
இயேசு கிறிஸ்து மட்டுமே தீர்க்கதரிசியாகவும் ஆசாரியராகவும் அரசனாகவும் விளங்கினார்.
ஆனால் உசியா ராஜா தனக்கு கொடுக்கப்படாத பணியைச் செய்ய விரும்பினான். கடவுள் தன்னை அழைக்காத இடத்திற்கு செல்ல முயன்றான்.
அவன் தூபபீடத்தில் தூபங்காட்டும்படி ஆலயத்திற்குள் நுழைந்தான்.
ஆசாரியன் அசரியாவும், தைரியமான இன்னும் எண்பது யெகோவாவின் ஆசாரியரும் அவனைத் தொடர்ந்து சென்று
அரசனுக்கு எதிர்முகமாகப் போய் நின்று, “உசியாவே, யெகோவாவுக்கு நறுமண தூபங்காட்டுவதற்கு உமக்குத் தகுதியில்லை. அது தூபங்காட்டுவதற்கெனப் பரிசுத்தமாக்கப்பட்ட ஆரோனின் சந்ததிகளான ஆசாரியருக்குரியது. பரிசுத்த இடத்தைவிட்டு வெளியேறும். நீர் பாவம் செய்தீர். நீர் இறைவனாகிய யெகோவாவினால் கனப்படுத்தப்படமாட்டீர்” என்று சொன்னார்கள்.
அந்த எச்சரிப்பை அவன் அலட்சியம் செய்தான்
அதைப் பொருட்படுத்தவில்லை. அதற்கு மாறாகக் கடும் கோபம் கொண்டான்.
விளைவு அந்த நிமிடமே அவனுக்கு அவனுடைய நெற்றியில் குஷ்டவியாதி தோன்றியது. உடனே அவன் வெளியேற்றப்பட்டான். பிறகு இறுதிக்காலம் வரைக்கும் அவன்
குஷ்டவியாதியுடன் ஒரு புறம்பான வீட்டில் வாழ்ந்தான்.
அவனுடைய மகன் யோதாம் அரண்மனைக்குப் பொறுப்பாயிருந்து நாட்டு மக்களை ஆளுகை செய்தான்.
அவன் இறந்தபோது அவன் சரீரம் அரசர்களுடைய கல்லறைகளோடு அடக்கம் செய்யப்படவில்லை.
அதற்குப் பக்கத்தில் உள்ள தனிப்பட்ட ஒரு இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
இதன் மூலம் வேதம் நமக்கு உணர்த்தும் பாடங்கள்.
1.இன்றைக்கு அசாரியா போன்ற ஆசாரியர்கள் தேவை. எவ்வளவு பெரிய ஆவிக்குரிய உயர்ந்த நிலையில் இருந்தாலும் அவர்கள் தேவனுக்கு விரோதமாக நடக்கும்பொழுது அதைத் தட்டிக் கேட்கும் தைரியம் உடையவர்கள் தேவை.
மன்னவனே ஆனாலும் பொன்னை அளவு இல்லாமல் கொடுத்தாலும் கர்த்தருடைய வழிகளை விட்டு விலகிப் போகும்போது கண்டிக்க கூடிய தைரியசாலிகள் கிறிஸ்தவத்தில் இன்றைக்கும் தேவைப்படுகிறார்கள.
2. அகந்தையோடு தன்னால் எல்லா பணிகளையும் தேவன் கட்டளையிடாத பணிகளையும் தன்னால்செய்ய முடியும் என்கிற ஆணவம் ஆபத்தானது.
3. மற்றவருடைய அழைப்பை நாம் கபளிகரம் செய்யக் கூடாது.
இந்த இடத்தில் எனக்குப் பிரியமான வியர்ஸ்பி அவர்கள் சொன்ன வார்த்தையைக் குறிப்பிட விரும்புகிறேன்
A good beginning is no guarantee of a successful ending, and the sin of unholy ambition has ruined more than one servant of the Lord. Uzziah the soldier was defeated by his pride; Uzziah the builder destroyed his own ministry and testimony; and Uzziah the farmer reaped the painful harvest of what he had sown. He is a warning to all who nurture unholy ambitions to intrude into that which God hasn't appointed for them.
உசியா ராஜாவின் ஆரம்பகால ஓட்டம் சிறப்பானது.ஆனால் முடிவு அகந்தையினால் சாபத்தில் முடிந்தது.
மனாசே அரசன் துன்மார்க்கமாய் நடந்தான். ஆனால் இறுதியில் தன்னை தாழ்த்தி ஆண்டவரோடு ஒப்புரவானான்.
நம்முடைய ஆவிக்குரிய ஓட்டம் சிறப்பாக முடிய கடவுள் நமக்குக் கிருபை தருவாராக..