Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

2 அரசர்கள் புத்தகம் வேதபாடம் 29.

2 அரசர்கள் புத்தகம் வேதபாடம் 29.

வீழ்ந்து போன யூதர்களின் சாம்ராஜ்யம் நமக்கு உணர்த்தும் பாடம்.

போலி தீர்க்கதரிசிகளை நம்பி கர்த்தரின் தீர்க்கதரிசனத்தை நம்பாமல் அழிந்து போன சிதேக்கியா ராஜா.



இவனேடைய பெயர் மத்தனியா. பாபிலோனின் ராஜாவான நெபுகாத்நேச்சார் இவனை ராஜாவாக வைத்து “சிதேக்கியா” என்று பெயர் மாற்றினார்.

இவன் சுமார் 11 ஆண்டுகள் ஆட்சி செய்தான்.


கர்த்தரின் பார்வையில் தீமையான காரியங்களைச் செய்தான்.

தந்தையான யோசியா போலத் தேவனுக்கு விசுவாசமாக இலலை‌.



ஆரம்பத்தில் பாபிலோனுக்கு கீழ்ப்படிந்து ஆட்சி செய்யத் தொடங்கினான்.
ஆனால் பின்னால் தன்னை அரசனாக்கிய பாபிலோனுக்கு விரோதமாக எகிப்துடன் கூட்டணி சேர முயன்றான். பாபிலோனுக்கு விரோதமாகக் கலகம் பண்ணினான்.

சிதேக்கியா ராஜா யூத சாம்ராஜ்யத்தின் கடைசி அரசனாக இருக்கப் போவதாக இருந்தாலும் அவன் ராஜ்ஜியம் அழிந்து போகாமல் இருக்க அவனையும் கர்த்தர் எச்சரித்தார்.

பாபிலோனிய ராஜ்யத்திற்கு விரோதமாகக் கலகம் செய்யக் கூடாது என்று ஆண்டவர் எச்சரித்தார்
ஆனால் அவன் வாழ்ந்த காலத்தில் இருந்த போலி தீர்க்கதரிசிகள் எருசலேம் நகரம் பாபிலோனியரின் கட்டுப்பாட்டுக்குள் வராது என்று பொய்யுரைத்தார்கள்.
எரோமியா 27:9,10

ஆனால் சிதேக்கியா ராஜா எரேமியா தீர்க்கதரிசியின் வார்த்தைகளையும், தேவனுடைய எச்சரிக்கைகளையும் கேட்கவில்லை.
2 இராஜாக்கள் 24:19; 2 நாளாகமம் 36:12; எரேமியா 37:2

அதேபோலப் பாபிலோனில் வாழ்ந்த எசேக்கியல் தீர்க்கதரிசி வார்த்தைகளையும் இவன் கேட்காமல் போனான்.

எசேக்கியேல் தீர்க்கதரிசி சொன்ன தீர்க்கதரிசனம் எசேக்கியேல் 12:10–14 , 17:11–21 ஆகிய இடங்களில் வருகிறது.

தன்னை நம்பிய பாபிலோனுக்கு விரோதமாகக் கலகம் செய்ய வேண்டாம் என்று ஆண்டவர் எச்சரித்தும் சிதேக்கிய ராஜா கலகம் செய்தான்.
இப்படி இரண்டு தீர்க்கதரிசிகளின் எச்சரிக்கைகளையும் புறந்தள்ளினான்.

விளைவு அதுவரைக்கும் எந்த ‌ யூத அரசனும் சந்திக்காத மிகப்பெரிய அவமானம், நிந்தையை சந்தித்தான்.

இவனுடைய காலத்தில் தான் எருசலேம் நகரம் முழுவதுமாகக் கைப்பற்றப்பட்டது.

தேவாலயம் தீக்கிரையாக்கப்பட்டது.

அதற்கு முன்பு எருசலேம் நகரம் 18 மாதங்கள் முற்றுகை போடப்பட்டது‌,
அந்த முற்றுகையில் மக்கள் மிகுந்த பஞ்சத்தினால் வாடினார்கள்.
மக்களுக்கு ஆகாரம் இல்லை‌.

இறுதியில் சிதேக்கியா ஆட்சியின் 11-ஆம் ஆண்டில், 4-ஆம் மாதம், 9-ஆம் நாள் நகரின் மதில் உடைக்கப்பட்டது.
அதன் விளைவாக
இரவில் சிதேக்கியா மற்றும் படைவீரர்கள் தப்பி ஓடினர்.
ஆனால் யெரிகோவின் சமவெளியில் பாபிலோனியர்கள் அவரைப் பிடித்தனர். (2 இராஜாக்கள் 25:4-5; எரேமியா 39:4-5)

நெபுகாத்நேச்சார் முன்னிலையில் சிதேக்கியாவை நிறுத்தினார்கள்.

அவரது மகன்களைக் கண்முன்னே கொன்று விட்டார்கள்.

பின்னர் அவரது கண்களைக் குத்தி, சங்கிலியால் கட்டி பாபிலோனுக்கு அனுப்பினர்கள்.
(2 இராஜாக்கள் 25:6-7; எரேமியா 39:6-7; 52:10-11)

நகரமும், எருசலேம் ஆலயமும் அழிக்கப்பட்டது

பின்பு பாபிலோனின் படைத்தளபதி நெபூசராதான் யெருசலேமுக்குள் வந்து:
ஆலயத்தையும், அரண்மனையையும், எருசலேமின் எல்லா பெரிய வீடுகளையும் எரித்தான்.

ஆலயத்தில் இருந்த தங்கம், வெள்ளி, வெண்கலப் பாத்திரங்களை எடுத்துச் சென்றான்.
(2 இராஜாக்கள் 25:8-17; 2 நாளாகமம் 36:19; எரேமியா 52:12-23)

ஏழைகள் மற்றும் விவசாயிகளைத் தவிர, மீதமிருந்த மக்கள் பாபிலோனுக்குச் சிறை கொண்டு செல்லப்பட்டனர்.

சில ஏழைகளுக்குக் பயிர் நிலங்களைக் களம் உழுவதற்காக விட்டுச் சென்றனர்.

சுருக்கமாகச் சொன்னால்,18 மாத முற்றுகையின்போது
எருசலேம் மக்கள் பட்டினியால் துன்பப்பட்டனர்,
சிதேக்கியா பிடிபட்டான்,
ஆலயம் எரிக்கப்பட்டது,
நகரம் இடிக்கப்பட்டது,
மக்கள் பாபிலோனுக்கு சிறையில் அனுப்பப்பட்டனர்.

அன்றைக்கு கிமு 568ல் வீழ்ந்த யூத ராஜ்ஜியம் கிபி1948ல் தான் அவர்களுக்கு ஒரு தனி நாடு கிடைத்தது.
அதாவது 2000 ஆண்டுகளுக்குப் பிறகு.

மத குருக்களின் அரசாக இருக்க வேண்டிய யூத மக்கள் உலக மக்கள் பின்பற்றுகின்ற அரசு முறையை விரும்பித் தேவனை தள்ளிவிட்டார்கள்

அதாவது, தேவன் ராஜாவாக இருக்க வேண்டும், யூத ஜனங்கள் முழுவதும் ஆசாரியர்களாக இருக்க வேண்டும் என்பதே கடவுளின் ஆரம்பத் திட்டமாகும் (யாத்திராகமம் 19:3-6).

அப்படி தேவனுடைய சித்தம் இல்லாமல் ஆரம்பிக்கப்பட்ட யூத ராஜ்ஜியம் சவுலில் தொடங்கி சிதேக்கியாவில் முடிந்தது. ‌
யூத மக்களின் வீழ்ச்சிக்கு நான் அறிந்த வரையில் முக்கிய காரணம அரசர்கள் கடவுளைமறந்து, கடவுளின் கற்பனைகளுக்குப் புறமுதுகு காட்டி
அந்நிய தேவர்களை வழிபட்டது மட்டுமல்லாமல் தங்கள் ஜனங்களையும் வழிவிலக செய்தார்கள்.
அரசன் எவ்வழியோ அவ்வழியில் மக்கள் என்பது போல அரசர்களைப் பின்பற்றி ஜனங்களும் வழி விலகிப் போனார்கள்‌.


இன்றைக்கு விசுவாசிகள் அதிகம் ஜெபிக்க வேண்டிய ஒரு காரியம் எது வந்தால் நம்மை வழிநடத்த நல்ல தலைவர்கள் வேண்டும் என்பதே.
தலைவர்கள் சரியான பாதையில் விசுவாசிகளை நடத்தவிட்டால் கிறிஸ்தவம் அடுத்த தலைமுறைக்குச் செல்ல முடியாது.
ஆத்துமாகளுக்காக, சபையின் வளர்ச்சிக்காக, எழுப்பதலுக்காக ஜெபிப்பது எப்படி அவசியமோ அதுபோல் நம்மை வழிநடத்தக்கூடிய நல்ல தலைவர்கள் நமக்கு வேண்டும் என்று ஒவ்வொரு விசுவாசியும் ஒவ்வொரு நாளும் ஜெபிக்க வேண்டியது நம்முடைய முக்கிய கடமையாக இருக்கிறது.
சிறந்த தலைமைத்துவம் இல்லாத அமைப்புகள் சபைகள் தலைகள் இல்லாத முண்டங்களை போன்றது. ஒவ்வொரு விசுவாசியும் இதை உணர்ந்து தங்கள் வழிநடத்த சிறந்து தலைவர்களுக்காக ஜெபிக்க வேண்டும்


இதுவே யூதர்களுடைய வரலாற்றைப் படிக்கும்போது நாம் கற்றுக் கொள்ளும் முக்கியம பாடம்.
அதைப்போல போலி தீர்க்கதரிசிகளை அடையாளம் கண்டு அவர்களை எச்சரிக்க கூடிய எசேக்கியேல், எரேமியா போன்ற தீர்க்கதரிசிகள் நம்மில் எழும்ப வேண்டும்.



எசேக்கியேல் சண்முகவேல்