போஜனபலி
உங்கள் சிந்தனைக்கு;
இஸ்ரவேல் ஜனங்கள் தேவனுக்கு செலுத்த வேண்டிய பலிகளில் சர்வாங்க தகனபலிக்கு அடுத்ததாக போஜனபலி மிகவும் முக்கியமானது.
இதில் நாம் கவனிக்க வேண்டிய முக்கிய காரியங்கள்.
இந்த பலியை செலுத்துகிறவன் மெல்லிய மாவையும் எண்ணையும் கொண்டு வர வேண்டும்.
கொண்டுவரப்பட வேண்டிய அந்த மாவு புளிப்பு இல்லாத மாவாக இருக்க வேண்டும்.
அந்த போஜனபலி உப்பினால் சாரமாக்கப்பட வேண்டும்.
இந்த போஜன பலி இயேசு கிறிஸ்து "நானே வானத்தில் இருந்து இறங்கி வந்த மெய்யான அப்பம்" என்று சொன்னதற்கு அடையாளமாய் இருக்கிறது.
வார்த்தையாக இந்த அப்பத்தை நாம் அனுதினமும் உட்கொள்ளும் பொழுது அது நமக்கு ஆவிக்குரிய
வளர்ச்சியை தரும் .
அதே வேளையில் இந்த தானிய காணிக்கை பலியில் கவனிக்க வேண்டிய மூன்று காரியங்கள்.
1. தேவ சமூகத்தில் சமர்ப்பிக்கப்படும் மாவு புளிப்பு இல்லாமல் இருக்க வேண்டும்.
அதாவது நம்முடைய வாழ்க்கை பொல்லாப்பு, துர்க்குணம் இல்லாத வாழ்க்கையாக இருக்க வேண்டும்.
நம்முடைய வாழ்க்கை மனத் தூய்மையும் உண்மையும் உள்ள வாழ்க்கையாக இருக்க வேண்டும்.1கொரி5:8
நம்முடைய வாழ்க்கையில் உண்மை இல்லாமல் ,மனதில் தூய்மை இல்லாமல் ,கொடூர குணத்தோடு, இரக்கம் இல்லாமல் மற்றவர்களை அடிமைகளாக நடத்தி கொடுக்கும் எந்த காணிக்கையையும் தேவன் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்.
அந்த காணிக்கையை ஒருபோதும் அங்கீகரிக்கவும் மாட்டார்.
வேண்டுமானால் அது விளம்பரத்திற்கும், ஊழியக்காரர்களை பிரியப்படுத்துகிற காரியத்திற்கு மட்டுமே பயன்படும்.
2. எந்த போஜன பலியும் உப்பினால் சாரமாக்கப்பட்டதாக இருக்க வேண்டும். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சொன்னபடி நாம் இந்த உலகத்திற்கு உப்பாக வாழ இயலாவிட்டால் நாம் கொடுக்கிற காணிக்கை எவ்வளவு உயர்ந்த காணிக்கையாக இருந்தாலும் அது பரலோகத்தில் நம்முடைய கணக்கில் வரவு வைக்கப்படாது.
3. மாவோடு எண்ணையையும் கொண்டு வர வேண்டும்.
எண்ணை 'அபிஷேகத்தை' குறிக்க கூடியது.
நாம் ஆவியினால் மறுபடியும் பிறவாமல் மறுப்பிறப்பின் அனுபவம் இல்லாமல் ஆண்டவருக்கு செலுத்துகின்ற எந்த காணிக்கையும் பரலோகத்தின் வாசலைக்கூட எட்டிப் பார்க்காது.
இன்றைக்கு காணிக்கைகளைப் பற்றி பேசுகின்ற போதகர்கள், நற்செய்தி பணியாளர்கள், மிஷனரி தலைவர்கள் இந்த அடிப்படை குணாதிசயங்களை போதிக்காமல் விசுவாசிகளிடம் பணத்தை மட்டும் கேட்பது மிகவும் அநியாயம். இப்படிப்பட்ட போதனை கொள்ளை நோயை போன்றது.
போஜனபலியை பற்றிய காரியங்கள் லேவியராகம புத்தகம் இரண்டாவது அதிகாரத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இதை தெளிவாக படித்தால் இன்னும் பல சத்தியங்கள் நமக்கு விளங்கும்.
காது உள்ளவன் கேட்கக் கடவன்