Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

பவுலின் கடைசி நாட்கள்
உங்கள் சிந்தனைக்கு
பவுலின் கடைசி நாட்கள்(படிக்க 2 தீமோ 4 வது அதிகாரம் )
பவுல் கடைசியாக எழுதிய நிருபம் தீமோதோயுவுக்கு எழுதிய இரண்டாவது நிருபம். தன் ஆயுட்காலம் முழுவதும் தனக்கு உத்தமமாய் இருந்த பிரியமுள்ள குமாரனாகிய தீமோத்தேயுவுக்கு அவர் எழுதிய இந்த கடிதம் மிகவும் நெஞ்சை பிளக்கும் உருக்கமான, நாம் கண்ணீரோடு படிக்கவேண்டிய ஒரு கடிதம் . நீரோ மன்னன் அளிக்கவிருக்கும் மரண தண்டனையை எதிர்நோக்கி இருக்கும் அவர் தன் பிரியமுள்ள குமாரனாகிய தீமோத்தேயுவுக்கு, கடைசி நாட்களில் நடைபெற போகும் நிகழ்வுகளை குறித்து எழுதிய கடிதம் இது. அது மட்டுமல்ல தனக்கு இறுதி காலத்தில் நேரிட்ட நிகழ்வுகளை குறித்து மிகவும் இதய பாரத்தோடு பகிர்ந்து கொள்கிறார்.
"கன்னானாகிய அலெக்சந்தர் எனக்கு வெகு தீமைசெய்தான்; அவனுடைய செய்கைக்குத்தக்கதாகக் கர்த்தர் அவனுக்குப் பதிலளிப்பாராக”
“நான் முதல்விசை உத்தரவுசொல்ல நிற்கையில் ஒருவனும் என்னோடேகூட இருக்கவில்லை, எல்லாரும் என்னைக்கைவிட்டார்கள்;"
" தேமா இப்பிரபஞ்சத்தின்மேல் ஆசைவைத்து, என்னைவிட்டுப்பிரிந்து, தெசலோனிக்கே பட்டணத்துக்குப் போய்விட்டான்”
ரோமாபுரியில் நடந்த ஆரம்ப விசாரணையில் தனக்கு ஆதரவாக யாரும் பேச முன்வரவில்லை என்பதை குறிக்கும் வகையில்தான் "நான் முதல்விசை உத்தரவுசொல்ல நிற்கையில் ஒருவனும் என்னோடேகூட இருக்கவில்லை" என்று கூறுகிறார்
முதல் தடவை ரோமாபுரியில் வீட்டு காவலில் வைக்கப்பட்டபோது அவருக்கு உதவியாக அநேக மக்கள் இருந்தனர். விசுவாசிகளை பார்க்கவும் யூதர்களோடு வேதத்தை விவாதிக்கவும் அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
("நாங்கள் ரோமாபுரியில் சேர்ந்தபோது, நூற்றுக்கு அதிபதி தன் காவலிலிருந்தவர்களைச் சேனாபதியினிடத்தில் ஒப்புக்கொடுத்தான்; அப்பொழுது பவுல் தன்னைக் காத்திருக்கிற சேவகனுடனே தனித்துக் குடியிருக்கும்படி உத்தரவு பெற்றுக்கொண்டான்."
"அதற்காக அவர்கள் ஒரு நாளைக்குறித்து, அநேகம்பேர் அவன் தங்கியிருந்த வீட்டிற்கு அவனிடத்தில் வந்தார்கள். அவன் காலமே தொடங்கி சாயங்காலமட்டும் மோசேயின் நியாயப்பிரமாணத்திலும் தீர்க்கதரிசிகளின் ஆகமங்களிலும் இருந்து இயேசுவுக்கடுத்த விசேஷங்களை அவர்களுக்குப் போதித்து, தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துச் சாட்சிகொடுத்து விஸ்தரித்துப் பேசினான்".
"பவுல் தனக்காக வாடகைக்கு வாங்கியிருந்த வீட்டிலே இரண்டு வருஷமுழுதும் தங்கி, தன்னிடத்தில் வந்த யாவரையும் ஏற்றுக்கொண்டு,")
வேத பண்டிதர்களின் கருத்துப்படி கி பி 61-63 வரை ரோம கட்டுப்பாட்டில் இருந்து பின்பு விடுதலையாக்கப்பட்டார்.
ஆனால் இந்த முறை சூழ் நிலைகள் தலைகீழாக மாறி போய்விட்டது.இந்த முறை ரோம சாம்ராச்சியத்தை ஆட்சி செய்தவன் கொடுங்கோல் நீரோ மன்னன். கிறிஸ்தவர்களுக்கு விரோதமான ஆட்சியை நடத்தியவன் ,எனவே அவனை பகைத்து பவுலுக்கு ஆதரவாக சாட்சி சொல்ல யாரும் முன்வரவில்லை எனவேதான் பவுல் எல்லாரும் 'என்னைக்கைவிட்டார்கள்;" என்று கதறுகிறார்
மேலும் அவர் கூறுகிறார் "லூக்கா மாத்திரம் என்னோடே இருக்கிறான். மாற்குவை உன்னோடே கூட்டிக்கொண்டுவா; ஊழியத்தில் அவன் எனக்குப் பிரயோஜனமுள்ளவன்."
"நீ சீக்கிரமாய் என்னிடத்தில் வரும்படி ஜாக்கிரதைப்படு"
இதில் ஆச்சரியமான காரியம் என்னவென்றால் எந்த மாற்குவை இரண்டாவது பிரயாணத்தில் வேண்டாம் என்று பர்னபாவோடு விவாதம் பண்ணினாரோ அதே மாற்குவை ஊழியத்தில் அவன் எனக்குப் பிரயோஜனமுள்ளவன் என்று கூறுகிறார். எப்போதுமே ஆரம்பம் அல்ல முடிவுதான் முக்கியம் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
பவுல் மிகப்பெரிய அப்போஸ்தலர்.தேவனுடைய சபையை குறித்த மிக முக்கியமான ரகசியங்களை தேவனிடத்தில் பெற்றவன் ,புற இனத்தார் மத்தியில் ரோம சாம்ராட்சியத்தின் எல்லையெங்கும் சபைகளை நிறுவியவன். புதிய ஏற்பாட்டு நிரூபங்களில் 13 நிரூபங்களை எழுதியவன் சபைக்காக மிகவும் பாடுபட்டவன்.சபை சரித்திரத்தில் மறக்கமுடியாத தேவனால் மிகவும் பயன் படுத்தப்பட்ட மனிதன் . ஆனால் அவனுடைய இறுதிக்காலம் மிகவம் வேதனையானது எல்லோரும் கைவிடப்பட்ட நிலை . நமது ஆண்டவரை போல் "என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் "என்று அவரும் சொல்லும் நிலைக்கு ஆளாக்கப்பட்டார்.
ரோமாபுரியில் அவரால் ஆவிக்குரிய நன்மைகளை பெற்ற அனேகர் இருந்தபோதிலும்,ரோமாபுரியிலுள்ள தேவப்பிரியரும் பரிசுத்தவான்களாகும்படி அழைக்கப்பட்டவர்களுமாகிய அனைவருக்கும் நிருபத்தை எழுதிய அவருக்காக நீரோ மன்னனை பகைத்து இவருக்கு ஆதரவாக யாரும் இல்லை.
எல்லோரும் கைவிடப்பட்ட நிலையில் நாம் இருந்தாலும் பவுலை போல நாமும்
“கர்த்தரோ எனக்குத் துணையாக நின்று, என்னாலே பிரசங்கம் நிறைவேறுகிறதற்காகவும், புறஜாதியார் கேட்கிறதற்காகவும், என்னைப் பலப்படுத்தினார்” என்று சொல்லி நமக்கு கொடுக்கப்பட்ட ஊழியத்தை நிறைவேற்றவும் “ நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்." என்று சொல்லி நமது ஓட்டத்தை நிறைவேற்றவும் அழைக்கப்பட்டிருக்கிறோம்