Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

2 அரசர்கள் புத்தகம் வேத பாடம் 16
உங்கள் சிந்தனைக்கு.
2 அரசர்கள் புத்தகம் வேத பாடம் 16

நன்றி மறந்த‌ யோவாஸ்.

படிக்க 2 அரசர்கள் புத்தகம் 12 வது அதிகாரம்.

இந்த அதிகாரத்தை
2 நாளாகமம் புத்தகம் 24 வது அதிகாரத்தோடு இணைத்துப் படித்தால்தான் யோவாஸ் குறித்த முழுமையான காரியங்களை அறிய முடியும்.

இவன் குழந்தையாக இருக்கும்பொழுது இவனுடைய பாட்டி அத்தாலியாளின் கொலை முயற்சியிலிருந்து இவனைக் காப்பாற்றியவள் யோசேபாள்.
இவள் யோவாஸின் தகப்பனான அகசியாவின் சகோதரி.
இந்த யோசேபாளின் கணவன்தான் ‌ ஆசாரியனாகிய யோய்தா.
இவனும் இவன் மனைவியும் சேர்ந்துதான் அத்தாலியாளை கொலை செய்து யோவாஸை அரசு பீடத்தில் அமர்த்தினார்கள்.

அவன் அரசனாகும்பொழுது அவனுக்கு வயது ஏழு.
40 வருடங்கள் ஆட்சி புரிந்தான். அந்தச் சிறு வயது முதல் இவனை ஆவிக்குரிய வழியில் வழிநடத்தி அரசாட்சி செய்வதற்கு வேண்டிய ஆலோசனைகளைக் கொடுத்து நாட்டைப் பாதுகாப்பாகக் கொண்டு சென்றவன் இந்த ஆசாரியன்.
யோய்தா அரசனுக்கு வழிகாட்டியாகவும், ஆலோசனைக்காரனாகவும் ,சிறந்த போதகராகவும் காணப்பட்டான்.
(Tutor, mentor, and spiritual guide.) அவனுக்கு இரண்டு திருமணங்களையும் செய்து வைத்தான்

இந்த யோய்தா உயிரோடு இருக்கும் காலம்வரை யோவாஸ் நாட்டைச் சிறப்பாக ஆட்சி செய்தான்.
கர்த்தருக்கு பிரியமான வழியில் நடந்தான்.
யோய்தா மரிக்கும் வரை அவனுடைய ஓட்டம் நன்றாக இருந்தது.

அவன் மரித்தபிறகு யோவாஸ் அதிகாரிகளின் சொல் கேட்டு விக்கிரக தோப்புகளை உண்டு பண்ணி விக்கிரகங்களை வழிபட்டான்.
இதனால் கர்த்தர் தம்முடைய ஊழியக்காரர்களை அனுப்பி அவனை எச்சரித்தார்.
அதற்கும் கீழ்படியவில்லை. இறுதியில் யோய்தாவின் குமாரன் சகரியாவின் மேல் தேவனுடைய ஆவியானவர் இறங்கி அவனை எச்சரித்தார்.
இதனால் ஆத்திரமடைந்த அரசன்
சகரியாவின் தகப்பன் யோய்தா தன்னில் காட்டிய தயவை நினைவில்கொள்ளாமல் அவனுடைய மகனைக் கொன்றான்.
சகரியா விழுந்து சாகும்போது, “யெகோவா இதைப் பார்த்து, உன்னிடத்தில் கணக்குக் கேட்பாராக” என்றான்.
2 நாளாகமம் 24:22
இறுதியில் எந்த அதிகாரிகளின் பேச்சைக் கேட்டுச் சகரியாவை கொலை செய்தானோ அந்த அதிகாரிகளே அவனைப் படுக்க அறையில் கொலை செய்தார்கள்.
இந்தச் சகரியாவின் மரணத்தைக் குறித்துதான் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் பல நூறு ஆண்டுகளுக்குப் பின்பு தன்னுடைய பிரசங்கத்தில் குறிப்பிட்டுள்ளார். லூக்கா 11:51
இந்த நிகழ்வின் மூலம் நாம் கற்றுக் கொள்ளும் பாடங்கள்.

1.கர்த்தருடைய பிள்ளைகளுக்கு, மற்றவர்கள் அவர்களுக்குச் செய்த நன்மைகளை மறவாத சிந்தனை வேண்டும்.

2.மனிதர்களுக்கு நன்றி இல்லாதவன் தேவனுக்கு ஒருபோதும் நன்றியுள்ளவனாகக் காணப்பட மாட்டான்.

3.ஒருவர் நமக்குச் செய்யும்நன்றியை மறக்கிற மனிதன் மிருகத்துக்குச் சமமானவன்.

4.ஏறி வந்த ஏணியை எறிய பின்பு‌ ஏணியை தள்ளி விடுகிறவன் ஒருபோதும் ‌ தேவனுடைய சித்தத்தை செய்ய முடியாது.
நாம் எதை விதைக்கிறோமோ அதையே அறுப்போம்.
5.நாம் மற்றவர்களுக்கு நன்றி இல்லாதவர்களாகக் காணப்படும்பொழுது நமக்கும் அப்படிப்பட்ட சூழ்நிலையைத் தேவன் ஏற்படுத்துவார்.
பட்டயத்தை எடுத்தவன் பட்டயத்தாலேயே வீழ்வான்.
6. நல்ல ஆரம்பம் சிறப்பான முடிவுக்கு உத்தரவாதம் அல்ல.
7. நன்றி மறவாமமை நல்ல ஆவிக்குரிய குணங்களில் ஒன்று.
இன்றைக்கு ஆவிக்குரிய உலகில் நாம் தேடித் தேடி கண்டுபிடிக்க வேண்டிய ஒரு குணம் தான் இந்த குணம்.

எசேக்கியல் சண்முகவேல்