Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

யோபுவின் புத்தகம் Expository Commentary on the Book of Job வேதபாடம் – 6
*உங்கள் சிந்தனைக்கு.*

**யோபுவின் புத்தகம்*
*Expository Commentary on the Book of Job*

*வேதபாடம் – 6*

வேத அறிஞர்கள் கூற்றுப்படி
சுமார் எழுபது ஆண்டுகள் யோபு எந்தக் கஷ்டங்களும், வறுமையும், பாடுகளும் அனுபவிக்காமல், கர்த்தரிடமிருந்து நன்மைகளையே பெற்றுக்கொண்டு வளமாக வாழ்ந்தான். ஆனால் திடீரென்று அவன் தனது பிள்ளைகளையும், செல்வத்தையும், சுகவாழ்வையும், உடல் ஆரோக்கியத்தையும் இழந்தான். இந்த நிகழ்வுகள் அனைத்தும் தேவனுடைய அனுமதியோடு சாத்தானால் நடப்பிக்கப்பட்டவை.
அதன்பின் யோபு தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டு, நகரத்திற்கு வெளியே குப்பைகள் கொட்டப்படும் இடத்தில் தங்கி வாழ்ந்தான். யோபுவுக்கு நேரிட்ட இடர்களையெல்லாம் தேமானியனான *எலிப்பாஸ்* , சூகியனான *பில்தாத்* , நாகமாத்தியனான *சோப்பார்* ஆகிய மூன்று நண்பர்களும் கேள்விப்பட்டார்கள். அவர்கள் யோபுவிடம் சென்று அவனுக்கு அனுதாபம் காட்டி ஆறுதல் கூறுவதற்காக தங்கள் வீடுகளிலிருந்து புறப்பட்டு ஒன்றுகூடி வந்தார்கள்.
இவர்களுக்கும் யோபுவுக்கும் இடையே நடைபெற்ற உரையாடல் யோபு 3ஆம் அதிகாரத்திலிருந்து 31ஆம் அதிகாரம் வரை நீள்கிறது.
தேவனைப் பற்றிய இவர்களுடைய புரிதல், அதாவது இவர்களுடைய இறையியல், பல இடங்களில் தவறானதாக இருந்தது. *தவறான இறையியல் கோட்பாடுகளையோ அல்லது முழுமையற்ற இறையியல் புரிதலையோ கொண்டிருக்கிற ஒருவர், உண்மையிலேயே* *பாடுபட்டுக்கொண்டிருக்கும் ஒருவருக்கு சரியான ஆறுதலை வழங்க முடியாது என்பதற்கு இவர்கள்* *ஒரு சிறந்த எடுத்துக்காட்டு* .

இவர்களுடைய தேவனைப் பற்றிய பார்வையைச் சுருக்கமாகப் பார்ப்போம்.
1. எலிப்பாஸ்
மூன்று நண்பர்களில் வயது முதிர்ந்தவன் எலிப்பாஸ். அவனுடைய பார்வையில் தேவனுடைய நீதி மிகவும் வலியுறுத்தப்பட்டது; ஆனால் *தேவனுடைய கிருபைக்கு போதுமான இடம் கொடுக்கப்படவில்லை.*
அவனுடைய கருத்துக்கள்:
(1) மனிதன் தேவனுக்கு முன்பாக நீதிமானாக இருக்க முடியாது
“மனுஷன் தேவனுக்கு முன்பாக நீதிமானாயிருக்க முடியுமோ?” (யோபு 4:17)
(2) மனிதன் விதைத்ததையே அறுப்பான்
“அக்கிரமத்தை உழுகிறவர்களும் தீமையை விதைக்கிறவர்களும் அதையே அறுக்கிறார்கள்.” (யோபு 4:8)
(3) துன்பம் தேவனுடைய சிட்சையாக இருக்கலாம்
“தேவன் கடிந்துகொள்ளுகிற மனுஷன் பாக்கியவான்.” (யோபு 5:17)
2. பில்தாத்

பில்தாத் ஒரு சட்டவாத மனப்பான்மையுடையவன் ( *Legalist* ).
அவனுடைய கருத்துக்கள்:
(1) தேவன் நீதியை வளைப்பதில்லை
“சர்வவல்லவர் நியாயத்தைப் புரட்டுவாரோ?” (யோபு 8:3)
(2) யோபுவின் பிள்ளைகள் பாவம் செய்ததால் தண்டிக்கப்பட்டனர்
“உன் பிள்ளைகள் அவருக்கு விரோதமாய்ப் பாவம் செய்திருந்தபடியால்...” (யோபு 8:4)

3. சோப்பார்

சோப்பாரின் பார்வையில் மனிதன் தன் செயலுக்கேற்ற பலனைப் பெறுவான். யோபு தகுதியான தண்டனையைவிடக் குறைவாகவே அனுபவிக்கிறான் என்பதே அவனுடைய கருத்து.
“உன் அக்கிரமத்திற்குத் தக்கதிலும் குறைவாகவே தேவன் உன்னைத் தண்டித்திருக்கிறார்” என்ற கருத்தை அவன் முன்வைக்கிறான் (யோபு 11:6).
மேலும், யோபு மனந்திரும்பினால் மீட்பு உண்டு என்றும் கூறுகிறான்.

*இவ்வாறு ஒவ்வொருவரும் தாங்கள் தேவனைப் பற்றி அறிந்திருந்த குறுகிய* *அறிவின் அடிப்படையில் யோபுவைப் பற்றி முடிவுகளைக்* *கட்டினார்கள்* . *அதனால் அவர்கள் யோபுவை சமாதானப்படுத்தவும் முடியவில்லை; உண்மையான ஆறுதலையும் வழங்க முடியவில்லை.*
இறுதியில், இவர்களுடைய கருத்துக்களை தேவனும் அங்கீகரிக்கவில்லை (யோபு 42:7).

*The friends had theology, but they did not have sympathy.*
இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் சத்தியங்கள்
1. ஒருவருடைய பாடுகளுக்கான காரணத்தைத் தீர்மானிக்க மனிதனுக்கு அதிகாரம் இல்லை.
*ஒரு விசுவாசியின் வாழ்க்கையில் பாடுகளை அனுமதிக்கிற தேவனுக்கும், அந்தப்* *பாடுகளைச் சகிக்கிற விசுவாசிக்கும் இடையிலான காரியங்கள் பல நேரங்களில் நமக்குத்* *தெரியாதவை* . ஆகையால், வெளியில் இருந்து நின்று ஒருவருடைய பாடுகளுக்கான காரணங்களை ஊகித்து தீர்ப்பு கூறுவது தவறு.
2. பாடுகளை அனுபவிக்கிற விசுவாசிக்கு ஆறுதல் கூறுகிறவர் சரியான இறையியல் புரிதலைக் கொண்டிருக்க வேண்டும்.
தேவனுடைய நீதியையும், இரக்கத்தையும், கிருபையையும், சிட்சையையும் சமநிலையாகப் புரிந்துகொள்ள வேண்டும். இந்தப் புரிதல் இல்லாதவர்கள் துன்பத்தில் இருப்பவர்களுக்கு சரியான ஆறுதலை வழங்க முடியாது. *செழிப்பின் உபதேசத்தை மட்டுமே வலியுறுத்துகிற* *ஒருவர், துன்பத்தில் இருக்கும் விசுவாசியை முழுமையாகத் தேற்ற* *இயலாது* .
3. எல்லா காரியங்களையும் தேவனுடைய இறையாண்மையின் வெளிச்சத்தில் புரிந்துகொள்ள வேண்டும்.

தாம் படைத்த எல்லாவற்றின்மேலும் ஆளுகை செலுத்த தேவனுக்கு முழு உரிமை உண்டு.

*தேவன் தமது இறையாண்மையின்படி ஒரு விசுவாசியை பாடுகளின் வழியாக* *நடத்த விரும்பினால், அதற்கு மனிதன் காரணங்களை கற்பித்து* *நியாயந்தீர்க்கக் கூடாது.*
நம்முடைய ஆறுதல் அன்பின் அடிப்படையில் இருக்க வேண்டும். “பாடுபடுகிற விசுவாசியைவிட நான் உயர்ந்தவன்” என்ற மனப்பான்மையில் வழங்கப்படும் எந்த ஆலோசனையும் உண்மையான ஆறுதலாக அமையாது.

எனவே, பாடுபடுகிற விசுவாசிகளை ஞானத்தோடும் அன்போடும் நடத்த கர்த்தர் நமக்குக் கிருபை அருள்வாராக.