*யோபுவின் புத்தகம்.* Expository Commentary on the Book of Job வேதபாடம் – 8
*உங்கள் சிந்தனைக்கு.*
*யோபுவின் புத்தகம்.*
Expository
Commentary on the Book of Job
வேதபாடம் – 8
முதல் சுற்றில் எலிப்பாஸ் கூறியவற்றுக்கு யோபு அளித்த பதில்களின் முக்கிய அம்சங்கள் மற்றும் அதன் மூலம் தேவன் நமக்குக் கற்பிக்கும் பாடங்கள்
பாடுகளின் மத்தியில் இருந்த யோபுவை ஆறுதல்படுத்துவதற்காக வந்த நண்பர்களில் முதலாவதாகப் பேசியவர் எலிப்பாஸ். அவர் ஆறுதல் கூற வந்திருந்தாலும், அவரது வார்த்தைகள் எந்த விதத்திலும் யோபுவை ஆறுதல்படுத்தவோ, சமாதானப்படுத்தவோ, உபத்திரவத்தில் நிலைத்திருக்க உதவவோ இல்லை. மாறாக, யோபுவின் *வேதனையின் ஆழத்தை உணராமல்,* *அவரது துயரத்தை மேலோட்டமாக மதிப்பிட்டு கூறிய ஆலோசனைகள்* *அவருடைய மனக்காயத்தை மேலும் அதிகரித்தன.*
பாடுகளின் வழியாகச் செல்லும் மக்களை ஆறுதல்படுத்தும் ஊழியத்தில் ஈடுபடுகிறவர்கள், யோபுவின் அனுபவத்திலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய சில முக்கியமான பாடங்கள் உள்ளன.
1. *பாடுகளின் பாரத்தை உணர வேண்டும்*
ஆறுதல் சொல்ல வருகிறவர்கள், பாடுகளின் வழியாகச் செல்பவர்களின் வேதனையை இயன்றவரை உணர்ந்து புரிந்துகொள்ள வேண்டும். இதைத்தான் யோபு இவ்வாறு கூறுகிறார்:
"என் சஞ்சலம் நிறுக்கப்பட்டு, என் நிர்ப்பந்தம் எல்லாம் தராசிலே வைக்கப்பட்டால் நலமாயிருக்கும். அப்பொழுது அது கடற்கரை மணலைப்பார்க்கிலும் பாரமாயிருக்கும்; ஆகையால் என் வார்த்தைகள் அவசரமானவைகளாயின."
(யோபு 6:2–3)
யோபுவின் துயரத்தின் அளவை எலிப்பாஸ் உணரவில்லை என்பதையே இந்த வார்த்தைகள் வெளிப்படுத்துகின்றன.
2. *ஆறுதலுக்குப் பதிலாக குற்றஞ்சாட்டக் கூடாது*
யோபு எலிப்பாஸிடம் இவ்வாறு கூறுகிறார்:
"செம்மையான வார்த்தைகள் எவ்வளவு வல்லமையுள்ளவை! ஆனால் நீங்கள் கடிந்துகொள்வதால் என்ன நிரூபிக்கிறீர்கள்?"
(யோபு 6:25)
இந்த வசனத்தின் மூலம், *ஆறுதல் சொல்ல வருகிறவர்கள் துன்பப்படுகிறவர்களை ஆதாரமின்றி* *குற்றம் சாட்டாமல், அவர்களை எழுப்பும்* *வார்த்தைகளையே பேச வேண்டும்* என்பதை அறிகிறோம்.
3. *வெளிப்புற வேதனையை மட்டுமல்ல, உள்ளத்தின் வலியையும் புரிந்துகொள்ள வேண்டும்*
யோபு 6:26–30-ல், தன் வேதனையால் வெளிப்பட்ட வார்த்தைகளைப் பிடித்துக்கொண்டு தன்னைத் தவறாகத் தீர்ப்பிட வேண்டாம் என்றும், தன்னிடம் அநீதி இல்லை என்றும் யோபு வலியுறுத்துகிறார்.
"என் நாவிலே அக்கிரமம் உண்டோ? என் வாய் ஆகாதவைகளைப் பகுத்தறியாதோ?"
(யோபு 6:30)
எலிப்பாஸ், யோபுவின் வேதனையை உணராமல், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அதுபோல, இன்று நாமும் "ஆறுதல்" என்ற பெயரில், ஏற்கனவே காயமடைந்தவர்களின் மனதில் மேலும்6 காயங்களை ஏற்படுத்துகிறவர்களாக இருக்கக் கூடாது.
முடிவுரை
*சரியான நேரத்தில், சரியான மனநிலையுடன்,* *சரியான நோக்கத்திற்காகப் பேசப்படும் வார்த்தைகளே* *உண்மையான ஆறுதலை அளிக்கும்.*
எனவே, பாடுகளின் பள்ளத்தாக்கின் வழியாகச் செல்லும் விசுவாசிகளை ஆறுதல்படுத்தும் ஊழியத்தில் ஈடுபடுகிறவர்கள் இந்த உண்மைகளை எப்போதும் மனதில் கொள்ள வேண்டும்.
தேவன் அப்படிப்பட்ட கிருபையையும் ஞானத்தையும் நமக்கெல்லாம் அருள்வாராக.
ஆறுதல் ஊழியத்திற்கு Sympathy (பரிதாப உணர்வு) மட்டும் போதாது; Empathy (மற்றவரின் வேதனையை உணர்ந்து அவருடன் இணைந்து நிற்கும் மனநிலை) மிகவும் அவசியம். Sympathy, Empathy-ஆக மாறும்போதுதான் அது உண்மையான கிறிஸ்தவ ஆறுதலாக மாறும்.