பழைய ஏற்பாட்டை எப்படி தியானிக்க வேண்டும்?
உங்கள் சிந்தனைக்கு:
பழைய ஏற்பாட்டை எப்படி தியானிக்க வேண்டும்?
பழைய ஏற்பாட்டை நாம் தியானிப்பதற்கும், புதிய ஏற்பாட்டை தியானிப்பதற்கும் ஒரு மிகப் பெரிய வித்தியாசம் உள்ளது என்று நான் கருதுகிறேன்.
புதிய ஏற்பாட்டின் எழுத்துக்கள் அனைத்தும் இயேசு கிறிஸ்துவின் பாடுகள் மற்றும் மரணத்துடன் நேரடியாக சம்பந்தப்பட்டிருப்பதால், விசுவாசிகளாகிய நமக்கு அவற்றைப் புரிந்து கொள்வதற்குத் தேவனுடைய வெளிச்சம் ஓரளவுக்கு இருந்தாலே போதும்.
ஆனால், பழைய ஏற்பாட்டைப் பொருத்தவரை, அதில் சொல்லப்பட்ட காரியங்களை வெறும் சரித்திர நிகழ்வுகளாக, கதையாகப் படிப்பதால் நமக்கு எந்த ஆவிக்குரிய பயனும் கிடையாது. அதாவது, அந்த நிகழ்வுகளைப் பற்றிப் பொது அறிவை பெறவேண்டும், அதில் உள்ள ஆறுதலான வசனங்களை எடுத்துக் கொள்ளவேண்டும் என்ற நோக்கத்தில் மட்டுமே படித்தால்கூட, தேவன் அவற்றை எழுதி வைத்திருக்கும் உண்மையான நோக்கத்தை நாம் புரிந்து கொள்ள முடியாது.
பழைய ஏற்பாட்டில் குறிப்பிடப்பட்ட பல நிகழ்வுகளுக்கும் ஆழமான ஆவிக்குரிய அர்த்தம், பார்வை உள்ளது. அவை நமக்கு உணர்த்தும் ஆவிக்குரிய செய்திகளை, நம்முடைய இன்றைய வாழ்க்கையோடு இணைத்து நோக்க வேண்டும். அப்போதுதான், ஆவியானவர் அவற்றை எழுதிக் கொடுத்த நோக்கம் நமக்குள் நிறைவேறும்.
ஒரு கட்டுப்பாட்டோடு—ஒரு நாளைக்கு இவ்வளவு அதிகாரம் படிக்கவேண்டும் என்ற கடமையுணர்வோடு பழைய ஏற்பாட்டை படித்தால், அந்த நிகழ்வுகள் மூலம் தேவன் நமக்கு சொல்ல விரும்பும் சத்தியங்கள் நம்முடைய கண்களுக்கு மறைந்துவிடும். இது தான் பல விசுவாசிகளின் வாழ்க்கையில்
நடக்கிறது.
தேவன் எந்த நிகழ்வையும் நோக்கமின்றி தவறுதலாக எழுதி வைத்திருக்க மாட்டார். அவைகளைப் படிக்கும்போது, புதிய ஏற்பாட்டுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். அந்த சரித்திர நிகழ்வுகள் நமக்கு கொடுக்கும் எச்சரிக்கை என்ன? அறிவுரை என்ன? ஆறுதல் என்ன? என்பதை நம் உள்ளத்தில் உணர்ந்துகொள்ள வேண்டும்.
அப்படித் தியானித்தால்தான், பழைய ஏற்பாட்டை தேவன் எழுதி வைத்த நோக்கம் நம் வாழ்க்கையில் நிறைவேறும். வெறும் கதைகளைப் போலப் படித்தால், நமக்கு எந்த ஆவிக்குரிய பயனும் கிடையாது. புதிய ஏற்பாட்டை நாம் கவனமாக, ஆர்வத்துடன் படிப்பது போலவே, பழைய ஏற்பாட்டையும் ஏனோ தானோ என்று இல்லாமல், ஆழமான அக்கறையோடு, கவனத்தோடு, பல்வேறு வேத விளக்கவுரைகளோடு ஒப்பிட்டு, "இந்த நிகழ்வு எனக்கு என்ன சொல்கிறது?" என்ற எண்ணத்துடன் படிக்க வேண்டும்.
பழைய ஏற்பாட்டை இந்த எண்ணத்தோடு தியானிக்கும் போது மட்டுமே, அது நமக்கு பயனுள்ளதாக இருக்கும். இல்லையெனில், வெறும் ஆறுதலான வசனங்களை மட்டும் தேர்ந்தெடுத்து பயன்படுத்திக் !, நாம் “திருப்பிப் போடாத அப்பம்” போல ஆகிவிடுவோம்.
இறுதியாக ஒரு வேண்டுகோ ள்:
அன்பு சகோதரர்களே, பழைய ஏற்பாட்டை ஒரு கதையாகவோ, நிகழ்வாகவோ மட்டும் படிக்க வேண்டாம். அவைகளை புதிய ஏற்பாட்டுடன் ஒப்பிட்டு, இன்றைய நம்முடைய வாழ்க்கையையும் பார்த்து, பழைய ஏற்பாட்டு வீரர்கள் நமக்காக என்ன சொல்ல வருகிறார்கள் என்பதை கண்டு கொள்ளுங்கள்.
Ezekiel Shanmugavel