Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

‌2 அரசர்கள் புத்தகம் வேத பாடம் ஐந்து
உங்கள் சிந்தனைக்கு.

2 அரசர்கள் புத்தகம் – வேத பாடம் 5

தேவனுடைய பிள்ளைகளிடம் வெளிப்பட வேண்டிய முக்கியமான காரியம்.

இந்த புத்தகத்தின் மூன்றாவது அதிகாரத்தில், ஏதோம் அரசனை எதிர்த்து யுத்தத்திற்குப் புறப்பட்டபோது, அவர்களுடைய படைவீரருக்கும், அவர்களுக்கும், அவர்களுடன் இருந்த மிருகங்களுக்கும் சிறிது தண்ணீர்கூட மீதமிருக்கவில்லை.

இதனால் இஸ்ரவேல் அரசனும், யூதா அரசனும் இணைந்து எலிசாவை பார்க்கச் சென்றனர்.

அப்போது யூத அரசன் யோசபாத் எலிசாவைப்பற்றி சொன்னது:
"கர்த்தருடைய வார்த்தை அவனிடத்தில் இருக்கிறது"
– 2 இராஜாக்கள் 3:12
எலிசா அதுவரை இரண்டு அதிசயங்களை செய்திருந்தாலும், அந்த அதிசயங்கள் எலிசாவை நோக்கி இழுத்துக் கொண்டு வரவில்லை. அவனிடத்தில் வெளிப்பட்ட தேவவசனமே அரசர்களை அசைத்தது.

கர்த்தருடைய வார்த்தைக்காகவே அரசர்கள் அவனை நோக்கி ஓடினார்கள்.
இயேசு கிறிஸ்து உயிரோடு இருந்த நாட்களிலும், அவருடைய அதிசயங்களுக்காக மட்டுமல்ல, அவருடைய வார்த்தையை கேட்பதற்காகவும் மக்கள் அவரை நெருங்கினார்கள் என்று லூக்கா 5:1ல் பார்க்கலாம்:

"பின்பு அவர் கெனேசரேத்து கடலருகே நின்றபோது, திரளான ஜனங்கள் தேவவசனத்தைக் கேட்கும்படி அவரிடம் நெருங்கினார்கள்."
– லூக்கா 5:1
இன்று சபைகளில் அதிசயங்கள், அற்புதங்களை நடத்திக்கொண்டிருக்கும் ஊழியர்களை நோக்கி பெருங்கூட்டம் சென்று கொண்டிருக்கிறது. அது தேவையானதே, இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் அதே வேளையில், அற்புதங்களை பெற்றவர்கள் அதிலேயே திருப்தியடையாமல், தேவவசனத்தையும் தேட வேண்டும்.

இன்றைக்கு தேவவசனம் ஊழியர்களிடம் வெளிப்படுவது அரிதாக இருக்கிறது. வேதத்தைக் கடுமையாகத் தியானித்து, சத்திய வசனத்தை நிதானமாக, சரியான முறையில் வியாக்கியாணம் செய்து (rightly dividing the word) போதிக்கிறவர்கள் மிகவும் குறைவு. விசுவாசிகள் வசனத்தை தேட வேண்டும், தியானிக்க வேண்டும், அதன்படி நடக்க வேண்டும் என்ற சிந்தனை இன்று மிகவும் குறைவாக காணப்படுகிறது. அந்த வெற்றிடத்தை உலக அதிசயங்கள், நன்மைகள், பொருளாதார ஆசைகள் நிரப்பி விட்டன.

பில்லி கிரகாம் தேவவசனத்தை தூய்மையாய் பிரசங்கித்து அதன்படி வாழ்ந்ததால், அரசியல்வாதிகள் அவரை நோக்கி ஓடினார்கள். ஆனால் இன்றைய கிறிஸ்தவ தலைவர்கள் அரசியல்வாதிகளை நோக்கி ஓடுகிறார்கள்

. காரணம் – அரசியல்வாதிகளை ஈர்க்கக்கூடிய தேவவசனம் அவர்களிடம் இல்லாததுதான்.
ஆதித் திருச்சபை எழுப்பப்பட வேண்டும் என்றால், அப்போஸ்தலர் 6:7, 19:20 போன்ற நிகழ்வுகள் நடக்கவேண்டும்
:
"தேவவசனம் விருத்தியடைந்தது; சீஷருடைய தொகை எருசலேமில் மிகவும் பெருகியது; ஆசாரியர்களில் அநேகரும் விசுவாசத்துக்குக் கீழ்ப்பட்டார்கள்."
– அப்போஸ்தலர் 6:7
"இவ்வளவு பலமாய்க் கர்த்தருடைய வசனம் விருத்தியடைந்து மேற்கொண்டது."
– அப்போஸ்தலர் 19:2
கிறிஸ்தவம் தமிழகத்தில் உண்மையாக வளர வேண்டும் என்றால், நற்செய்தி பணியோடு வேத தியானமும் சரியாக போதிக்கப்பட வேண்டும். நான் இரட்சிக்கப்பட்ட காலங்களில் அரை மணி நேர வேதப் பாடத்துக்காக பல மணி நேரம் பயணம் செய்து தியான கூட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறேன். வேதத்தைப் படிக்க வேண்டும், தியானிக்க வேண்டும் என்ற ஒரு அக்னி இன்றைய விசுவாசிகளின் உள்ளங்களில் காணப்படாதது பரிதாபம்.
இன்றைய சபைகள் விசுவாசிகளை வசனத்தை நேசிக்கவும், தியானிக்கவும் பழக்கப்படுத்துவதில் தோல்வியடைந்துள்ளன. வசனத்திற்குத் திரும்புவதே இன்று சபைகளில் காணப்படும் அனைத்து பிரச்சினைகளுக்கும் சரியான மருந்து.

எசேக்கியேல் சண்முகவேல்