இரண்டு அரசர்கள் புத்தகம். வேத பாடம் ஏழு
உங்கள் சிந்தனைக்கு.
இரண்டு அரசர்கள் புத்தகம்.
வேத பாடம் ஏழு
தலைப்பு
இன்றைய கேயாசிகள்
கேயாசி வாழ்க்கை, இன்றைய சபைகளுக்குத் தலைவர்களுக்கு மிகப்பெரிய தேவன் கொடுத்தும் எச்சரிக்கை.
முதலில் எலிசா கேயாசி வாழ்ந்த காலத்தின் சூழ்நிலையைப் பார்க்க வேண்டும்.
ஆகாப் அரசனும் அவருடைய மனைவி யேசபேலும் இஸ்ரவேல் தேசத்தைப் பாகால்களைப் பின்பற்றுகிற தேசமாக மாற்றிய காலகட்டம்.
ஆகாப்புக்கு பின்வந்த அரசர்களும் கடவுளைத் தாவீதைப் போல உத்தமமாகப் பின்பற்றவில்லை.
எலியா தீர்க்கதரிசிக்கு பிறகு எலிசா கர்த்தருடைய வார்த்தைகளை ஜனங்களுக்குச் சொல்லி எச்சரிக்கிற தீர்க்கதரிசியாகக் காணப்பட்டார்.
இஸ்ரவேல் தேசத்திற்கு விரோதமாகச் சீரிய அரசன் யுத்தம் பண்ணிக் கொண்டிருந்த காலம்.
ஒரு நெருக்கடியான காலகட்டத்தில் எலிசாவின் உடல் ஊழியனாகக் கேயாசி இருந்தான்
ஒரு மிகப்பெரிய பொறுப்பு கேயாசிக்கு இருந்தது.
ஒரு தலைவன் கர்த்தருடைய வழியில் உண்மையாக நடக்கும்பொழுது அவனுடைய உடன் ஊழியக்காரன் தன் தலைவனுக்கு உத்தமமாக நடக்க வேண்டியது அவனுக்குள்ள பொறுப்பு, தன் தலைவனுடைய சிந்தனைகளை உள்வாங்கிக் கொண்டு தலைவருடைய தரிசனத்தில் நடக்க வேண்டும்.
ஆனால் கேயாசி அப்படியாக நடக்கவில்லை.
ஆரம்பம் முதலே அவனுக்கு எளியவர்கள் மீது ஒரு வெறுப்பும், பணக்காரர்கள்மீது ஒரு பாசமும் இருப்பதை வசனத்தை நன்கு கவனிக்கும்போது புரிந்து கொள்ளலாம்
சூனேமியாளுக்கு அனேக நாள் குழந்தை இல்லாமல் இருந்து பிறகு எலிசாவில் வார்த்தையின் படி ஒரு குழந்தை பிறந்தது.
அந்தப் பிள்ளை பெரியவனாகி மரித்தபோது அந்தத் தகவலைச் சொல்வதற்காக அவள் எலிசாவிடம் வந்து அவருடைய கால்களைப் பிடித்து மன்றாடியபோது, எதையும் அறிந்து கொள்ளாமல் கேயாசி அவளுடைய உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் அவளை விலக்கி விட முன்வந்தான்.
4:27
இது அவனுடைய இரக்கமற்ற குணத்தை காட்டுகிறது.
ஆனால் அதே வேளையில் நாகமான் அதிசயத்தைப் பெற்று தன்னுடைய நாட்டுக்குத் திரும்பும்பொழுது ‘தனது எஜமான் சீரியனான நாகமான் கொண்டுவந்தவற்றை ஏற்றுக்கொள்ளாமல் விட்டுவிட்டார், யெகோவா இருப்பது நிச்சயமெனில், நான் அவனுக்குப் பின்னாலே ஓடி அவனிடமிருந்து ஏதாவது ஒரு பொருளைக் கேட்டுவாங்குவேன்” என்று தனக்குள்ளே யோசித்த நாகமானை அவசரமாய்ப் பின்தொடர்ந்தான்.”
பணக்காரனிடமிருந்து பரிசைப் பெறுவதற்காக ஓடிய கேயாசி ஏழைப் பெண்மணி தன் உணர்வுகளைத் தீர்க்கதரிசியிடம் வெளிப்படுத்த
தடுத்தான்.
அவன் உள்ளத்தில் பண ஆசை வேறொன்றி காணப்பட்டது. விளைவாக அவன் செய்த தவறுகள்
1யெகோவாவின் பெயரைத் தவறாகப் பயன்படுத்தினான்.
2. நாகமானிடம் பொய் சொன்னான்.
3. நாகமானிடம் தன் எஜமான் பெயரைத் தவறாகப் பயன்படுத்தினான்
4. இறுதியாகத் தன் எஜமானிடமே பொய் சொன்னான்.
தான் வாழ்ந்த காலம் எப்படிப்பட்ட காலம், எவ்வளவு உண்மையாகப் பணி செய்ய வேண்டிய நேரம், புறயின மக்களிடம் எப்படி தன் எஜமானனை போல் பண ஆசை இல்லாதவனாகக் காணப்பட வேண்டிய நேரம், இவற்றையெல்லாம் சற்றும் கவனிக்காமல் அலட்சியப்படுத்தி தன்னுடைய காலத்தை, அங்கிகள், ஒலிவத்தோப்புகள், திராட்சைத் தோட்டங்கள், செம்மறியாட்டு மந்தைகள், மாட்டு மந்தைகள், வேலைக்காரர், வேலைக்காரிகள் ஆகியவற்றைப் பெற்றுக்கொள்ள வேண்டிய சமயமாக மாற்றி விட்டான்.
விளைவு
கேயாசி உறைபனியின் வெண்மையைப் போல் குஷ்டரோகி ஆனான்.
இதை இன்றைய சூழ்நிலையோடு நாம் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். தலைவர்கள் இந்தக் கடைசி காலகட்டங்களில் வருகையைப் பற்றிப் பேசுகின்ற இந்தக் காலகட்டங்களில் எப்படிபட்ட பண ஆசை இல்லாதவர்களாக வாழ வேண்டும் என்கிற சிந்தனை சிறிது கூட இல்லாமல் காணப்படுகிறார்கள்.
கடவுள் தங்களுக்கு கொடுத்த கிருபை வரங்களை வியாபாரமயமாக்கி அவர்களும் அவருடைய குடும்பங்களும் தலைமுறை தலைமுறைக்குச் சொத்துக்களை சேர்த்து குவிக்கின்றனர். அதே வேளையில் ஸஉண்மையாக ஊழியம் செய்கிற ஊழியர்களுக்காக மிக்க நன்றி செலுத்துகிறேன்.
இந்தக் கேயாசியை பொறுத்த அளவில் அவன் எந்த வரத்தையும் பெற்றவன் அல்ல . வரத்தை உடைய எலிசாவே நாகமானின் பரிசுகளை வேண்டாம் என்று சொன்னபிறகு அந்தப் பரிசைப் பெறுவதற்கு இவ்வளவேனும் தகுதி இல்லாத கேயாசி வெள்ளிக்கட்டிகளையும் அங்கிகளையும் பெற்றுக் கொண்டது போல இன்றைக்கு தேவனால் இலவசமாய் பெற்ற வரங்களைப் பயன்படுத்தி பணக்காரர்களைத் தங்கள் வலைக்குள் இழுத்து கொள்கிறார்கள்.
அதே வேளையில் எளிய விசுவாசிகளை ஒதுக்கப்பட்டவர்களை தூரத்தில் நிற்க வைத்து அனுப்பி விடுகிறார்கள்.
இத்தகைய கேயாசிகளை நாம் எச்சரிக்கையோடு அணுக வேண்டும்.
வேதத்தைப் போதிக்க வேண்டிய உதடுகள் பொய்கள்மேல் பொய்களைச் சொல்லித் தங்களோடு கடவுள் இல்லாதிருந்தும் இருப்பதாகச் சொல்லி மக்களை ஏமாற்றுகிறார்கள்.
பண ஆசையே எல்லா தீமைக்கும் அடிப்படையாக இருக்கிறது என்கிற சத்தியத்தை அறிந்தும் அந்தச் சத்தியத்தை புறம்பே தள்ளிவிட்டு விசுவாசிகளிடமிருந்து பெற்ற பணத்தை கொண்டு
அவர்கள் மட்டும் அலங்காரமான வீடுகளில் வாழும் காலமா இது?” என்று ஆகாய் தீர்க்கதரிசியை போல் கேட்க வேண்டிய சூழலில் உள்ளது
எனவே ஒவ்வொரு விசுவாசியும் கேயாசியை போன்ற தலைவர்களை நோக்கி"பணத்தை வாங்குகிறதற்கும், வஸ்திரங்களையும், ஒலிவத்தோப்புகளையும் திராட்சத்தோட்டங்களையும் ஆடுமாடுகளையும் வேலைக்காரரையும் வேலைக்காரிகளையும் வாங்குகிறதற்கும் இது காலமா? என்று தைரியமாகக் கேட்பதற்கு முன்வர வேண்டும்.
அப்படி தைரியம் இல்லை என்றால் அப்படிப்பட்ட தலைவர்களுக்கு உங்கள் காணிக்கை அனுப்பாதீர்கள். இந்த ஒரு காரியத்தை யாவது விசுவாசிகள் செய்ய வேண்டும்.
விசுவாசிகள் தைரியமாக இது மாதிரியான காரியங்களை எதிர்த்துப் போராட முன் வர வேண்டும்.
நம்முடைய தலைவர்களைச் சபையை இந்த உலகம் ஒரு பொருட்டாகவே மதிக்காத இந்தக் காலகட்டத்தில் நம்மைச் சூழ்ந்து வரும் அநேக எதிர்ப்புகளை எதிர்கொள்ள வேண்டிய இந்த நேரத்தில் எவ்வளவு சாட்சியுள்ள வாழ்க்கை வேண்டும் என்கிற அவசியம் உள்ள இந்தக் காலகட்டத்தில்ஆன்மீகத் தலைவர்கள் என்று பேசிக்கொள்ளும் நம்முடைய தலைவர்கள் எவ்வளவு தியாகமாக அர்ப்பணிப்புடன் சாட்சியாக வாழ வேண்டும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்
விசுவாசிகள் வியர்வை சிந்தி கொடுத்த காணிக்கைகளை வருமான வரி அதிகாரிகளுக்கு லஞ்சமாகக் கொடுப்பதும் அரசியல்வாதிகளுக்குக் காணிக்கை கொடுப்பதும் ரியல் எஸ்டேட் தொழில்களில் ஈடுபடுவதும் உயர் கல்வி படிக்க முடியாத தன் சபையில் உள்ள ஏழைகளுக்கு உதவ முடியாமல் தங்கள் பிள்ளைகளை மட்டும் லட்சக்கணக்கில் பணம் செலவழித்து வெளிநாட்டில் படிக்க வைப்பதும் எந்த வகையில் நியாயம் அவர்களுக்கு வேதம் கேட்கக்கூடிய ஒரே கேள்வி இதுதான்
'சுகபோகமாக வாழ்வதற்கும் விதவிதமான வாகனங்கள் வாங்குவதற்கும் ஆடம்பரமாகச் செலவு செய்வதற்கும் பணத்தை வெளிநாட்டு வங்கிகளில் சேர்த்து வைப்பதற்கும் இதுவா காலம்'